சனாதான கூட்டம் நடைபெறும் இடமாக ஆளுநர் மாளிகை..! ஆர்.என்.ரவிக்கு எதிராக சுப. வீரபாண்டியன் போராட்டம்
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியல் தொடர்பாக கருத்துகள் கூறட்டும் என திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
ஆளுநருக்கு எதிராக புகார்
தமிழக ஆளுநருக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் புகார் கூறி வருகின்றனர். ஆளுநரை திரும்ப பெறக்கோரி குடியரசு தலைவரிடம் மனுவு கொடுத்துள்ளனர். இந்தநிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் தலைமையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை மத்திய அரசு திரும்பப் பெறக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரம் விளக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆளுநருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சுப.வீரபாண்டியன், ஆளுநரை திரும்பப் பெற வேண்டிய கோரிக்கையே ஆளுநருக்கு அழகு அல்ல, விவாதத்திற்கு மேம்பட்டவராக ஆளுநர் இருக்க வேண்டும் என்று கூறிய அவர் நான்கு அடிப்படையில் ஆளுநர் தனக்கான சட்ட உரிமையை மீறி இருக்கிறார் என்று பட்டியலிட்டு காட்டினார்.
சட்டத்தை மீறிய ஆளுநர்
ஒன்று தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படுகிற சட்டமுன் வடிவுகளை உடனுக்குடன் குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டிய ஆளுநர் அனுப்பாமல் காலம் தாழ்த்துகிறார். இரண்டு வேந்தர் என்கிற முறையில் பல்கலைக்கழகங்களை தான் கைப்பற்ற வேண்டும் என்று நினைக்கிறார். மூன்று தனது சித்தாந்தங்களை வெளியிடுவதற்கு ஆளுநர் பொறுப்பை அவர் பயன்படுத்திக் கொள்கிறார். நான்கு சனாதான கூட்டங்களுக்கு இடம் கொடுக்கிற இடமாக ஆளுநர் மாளிகையை அவர் மாற்றி உள்ளார் என சுப வீரபாண்டியன் குற்றம்சாட்டினார். தமிழக ஆளுநர் ஆர்.என.ரவி தனது பதவியை விட்டு விலகி தனது சொந்த கருத்தை அவர் பேசலாம். தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தில் எழுதி கொடுக்கும் உரையைத் தான் ஆளுநர் படிப்பார். அதற்கு ஆளுநர் உரை என்று பெயர் ஆனால் ஆளுநரின் உரையை ஒரு வரியை கூட அதில் சேர்க்க முடியாது, ஆட்சியில் இருப்பவர்கள் எழுதி கொடுக்கும் உரையை மட்டும்தான் படிப்பது ஆளுநரின் வேலை என்று கூறினார்.
நாடு முழுவதும் ஆர்பாட்டம்
அரசுக்கு எதிராக பேச எந்த ஆளுநருக்கு உரிமையில்லை என்று தெரிவித்தவர், நீதிபதியாக இருந்தாலும் ஆளுநராக இருந்தாலும் குடியரசுத் தலைவராகவே இருந்தாலும் அவர்கள் எல்லோருக்கும் உண்மையானவர்களாக அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டவர்களுக்காக விளங்க வேண்டும் என தெரிவித்தார். எனவே அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராகவே செயல்படும் ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார். இல்லையென்றால் நாடு முழுவதும் ஆளுநருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என சுப.வீரபாண்டியன் எச்சரிக்கை விடுத்தார்.
இதையும் படியுங்கள்