அரசு எச்சரிக்கை விடுத்ததால் இன்று ஆசிரியர்கள் பள்ளி திரும்புவார்கள் என நம்பிக்கையுடன் பள்ளிக்கு வந்த மாணவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். பல்வேறு பகுதிகளில் ஆசிரியர்களின் செய்ல்பாட்டை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி 22ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதனால் கடந்த 7 நாட்களாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகள் மூடப்பட்டுள்ள. மாணவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். அரசு இன்றைக்குள் ஆசிரியர்கள் பள்ளிக்கு திரும்ப வேண்டும் என கடுமையாக எச்சரித்தும் ஆசிரியர்கள் அதனை பொருட்படுத்தாமல் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். 

இதனால், பெரும்பாலான ஆசிரியர்கள் பணிக்கு திரும்பவில்லை. தஞ்சை மாவட்டத்தில் 69 சதவிகித பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில் 80 சதவிகித ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவில்லை. கடலூரில் 1200 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ராமேஸ்வரத்தில் 30 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் ஏமாற்றத்துடன் மாணவர்கள் வீடு திரும்பினர். செயல்களை கண்டித்து பல்வேறு இடங்களில் ஆசிரியர்களின் செயல்பாடுகளை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். கும்பகோணம் நாச்சியார்குப்பம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் மாணவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சில பள்ளிகளில் மாணவ -மாணவிகளே ஆசிரியர்களுக்கு பதிலாக பாடங்களை நடத்தி வருகின்றனர். 

ஆசிரியர்களுக்கு எதிராக போராடி வருவதால் மாணவர்கள் வைத்திருந்த நம்பிக்கையையும், மரியாதையையும் இழக்கும் சூழல் உருவாகி உள்ளதாக கல்வித்துறை சார்ந்த நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.