ஊதிய வெட்டு, ஊழியர்கள் அலைக்கழிப்பு போன்ற நடவடிக்கைகளை நிறுத்தாவிட்டால், வரும் 24-ஆம் தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக போக்குவரத்து கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தொழிற்சங்க கூட்டமைப்பின் இணையவழி கூட்டம் 19- 7- 2020 அன்று நடைபெற்றது, அதில் பல்வேறு முடிவுகள் மேற்கொள்ளப்பட்டது. போக்குவரத்து கழக நிர்வாகிகள் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் சம்பளம் வழங்கும்போது தொழிலாளர்களது விடுப்பை கழித்து சம்பளம் வழங்குவது, விடுப்பு இல்லாவிட்டால் சம்பளத்தை பிடித்தம் செய்வது போன்ற தவறான நடவடிக்கைகளை மேற்கொண்டன. ஜூலை 1-ஆம் தேதி முதல் பேருந்துகள் இயங்காத நிலையில், தொழில்நுட்ப மற்றும் அலுவலக பணியாளர்களை வேலைக்கு  வரவைத்து பல்வேறு தேவையற்ற வேலைகளை வழங்குவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். 

 

எனவே போக்குவரத்து கழக நிர்வாகங்களின் தவறான நடவடிக்கைகளில் சரி செய்யக்கோரியும், தொழிலாளர்களுடைய பிரச்சினைகளை தீர்க்க கோரியும், போக்குவரத்து செயலாளர் மற்றும் நிர்வாக இயக்குனர்களுக்கு கூட்டமைப்பின் சார்பில் முறையீடு செய்தோம். கழக தலைமையகங்கள் மற்றும் மண்டல தலைமை இடங்களில் நிர்வாக இயக்குநர்கள் மற்றும் பொது  மேலாளர்களை சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தினோம். ஆனாலும் நாம் முன்வைத்த கோரிக்கைகளை விவாதித்து தீர்வு காண எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை, ஜூலை மாத ஊதியம் வழங்கும் போது இதுபோன்ற தவறான நடவடிக்கைகள் தொடரக்கூடாது எனவும்  கோரியுள்ளதோடு கழக  மட்டங்களில் முன்னுக்கு வந்துள்ள பிரச்சினைகளையும் இணைத்து போக்குவரத்தை செயலாளர் மற்றும் கழக அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். கடிதத்தின் நகல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. 23-7-2020 ஆம் தேதிக்குள் நாம் முன்வைத்த கோரிக்கைகளை விவாதித்து தீர்வு காண நிர்வாகங்கள் முன் வராவிட்டால், 24-7-2020 ஆம் தேதி அன்று காலை 10 மணிக்கு சென்னையில் கூட்டமைப்பு சங்க தலைவர்கள், சங்கத்திற்கு இரண்டு பேர் என்ற அடிப்படையில் உண்ணாவிரதப் போராட்டத்தை தூக்குவது என முடிவு மேற்கொண்டுள்ளோம். 

24-7-2020 ஆம் தேதி உண்ணாவிரதம் துவங்கிய பின் புதிய நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி அனைத்து நிர்வாக இயக்குனர்களுக்கும் அந்தந்த கழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் மிஸ்டுகால் கொடுப்பது என முடிவு மேற்கொண்டுள்ளோம். எனவே கழக மட்டத்தில் அனைத்து தொழிற்சங்க கூட்டத்தை நடத்தி உண்ணாவிரதப் போராட்டத்தை தொழிலாளர்கள் மத்தியில் கொண்டு செல்ல பிரச்சாரம் செய்ததுடன், நிர்வாக இயக்குனர்களின் கைபேசி மற்றும் தொலைபேசி எண்களை தொழிலாளர்களுக்கு வழங்குவது, மிஸ்டுகால் கொடுத்து கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். அரசு இப்பிரச்சினைக்கு தீர்வு காண முன்வராத நிலை ஏற்பட்டு தலைவர்களின் உண்ணாவிரத  போராட்டம் தொடரும் என்றபோது, அதை ஆதரித்து அனைத்து கழகங்களிலும் சக்திமிக்க போராட்டங்களுக்கு திட்டமிட வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியூசி,  எச். எம்.எஸ். போன்ற தொழிற்சங்கங்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.