இதுகுறித்து கே.பாலகிருஷ்ணன் தலைமைச் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மீண்டும் அதிர்ச்சியளிக்கும் வகையில் அதிகரித்து வருகிறது. இந்தக் கொடும் நோய்த் தொற்றின் இரண்டாவது அலை இளம் தலைமுறையினரையும் மோசமாகப் பாதித்து வருகிறது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் நேற்று (15.4.2021) ஒரு நாள் மட்டும் 7,987 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 2,558 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. 29 பேர் உயிரிழந்துள்ளனர். நாளொன்றுக்கு 10 சதவிகிதம் கொரோனா பரவல் அதிகரிக்கிறது. இது மேலும் உயரக் கூடும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக அரசு கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க தமிழகம் முழுவதும் போர்க்கால அடிப்படையில் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். தேர்தல் நடத்தை விதிமுறைகளைத் தளர்த்தி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். தமிழகத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தல் முடிந்து, வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் நடைமுறை விதிகள் அமலில் உள்ளன. இந்நிலையில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் கொரோனா தடுப்பு மற்றும் மருத்துவ சிகிச்சைப் பணிகளை மேற்கொள்வதில் நிர்வாக ரீதியாக சிரமங்கள் தொடர்கின்றன.
போர்க்கால அடிப்படையில் மாநில அரசு, அரசியல் கட்சிகள், சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் அமைப்புகள் அனைத்தையும் களமிறக்கி கொரோனா தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க மாபெரும் கடமையாற்ற வேண்டியுள்ளது. எனவே, கொரோனா தொற்றுப் பணிகளை மேற்கொள்வதற்கு தேர்தல் நடத்தை விதிமுறைகளிலிருந்து விதிவிலக்கு பெற்று பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம். தமிழக அரசு, தேர்தல் ஆணையத்தை அணுகி இதற்கான உரிய உத்தரவுகளைப் பெற வேண்டும்.” என்று அந்தக் கடிதத்தில் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.