தமிழகத்தில் 3 இடங்கள் உள்பட நாடு முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஒப்பந்தம் டெல்லியில் நேற்று  கையெழுத்தானது.தமிழகத்தில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் உள்ளிட்ட 3 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஒப்பந்தம், ‘ஸ்டெர்லைட்’ வேதாந்தா குழுமம் மற்றும் ஓ.என்.ஜி.சிக்கு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன்எடுப்பதற்கு மத்திய அரசு ஏற்கெனவே திட்டமிட்டு பணிகளைத் துவக்கியது. ஆனால் தமிழக மக்களிடம் எழுந்த கடுமையான எதிர்ப்புகளை அடுத்து நிறுத்தி வைப்பது போலப் பம்மியது.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாச லில் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் உள்ளிட்ட 3 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஒப்பந்தம், ‘ஸ்டெர்லைட்’ வேதாந்தா குழுமம் மற்றும் ஓ.என்.ஜி.சிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று இடங்களில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலும், தூத்துக் குடி ஸ்டெர்லைட் ஆலை உரிமை யாளரான வேதாந்தா நிறுவனத்துக்கு காவிரி டெல்டா பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் டெல்லியில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் நேற்று கையெழுத்தானது. இந்நிகழ்ச்சியில் வேதாந்தா குழுமத்தின் நிறுவனரான அனில் அகர்வால் கலந்து கொண்டார்.

ஹைட்ரோ கார்பன் திட்டம் கையெழுத்தான பின்பு வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால்  செய்தியாளர்களிடம் பேசும்போது, “ஸ்டெர்லைட் ஆலை மிக விரைவில் திறக்கப்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்றார். அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசும்போது , தமிழகத்தில் காவிரிபடுகை கடற்பகுதியின் 2 இடங்களில்தான் வேதாந்தா நிறுவனம் ஹைட்ரோகார்பன் எடுக்கும் என்பதால் பிரச்சனை வராது என்றார்.