ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்துக்கு அழைத்தால் வருவேன் என்றும் ஊடகங்களும், பொது மக்களும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட வேண்டியது கடமை என்றும்  நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

தூத்துக்குடி–மதுரை பைபாஸ் சாலையில்  ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் அமைந்து உள்ளது. இந்த நிறுவனத்தில் ஆண்டுக்கு 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அந்த ஆலையின் அருகே மேலும் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யும் வகையில் ஆலை விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி கிராம  மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நேற்று நடைபெற்ற பிரமாண்ட கண்டன போராட்டத்தில் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது டுவிட்டரில், ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தூத்துக்குடி மக்களுடன் நான் உள்ளேன். ஆலை தொடர்பான மக்கள் போராட்டத்துக்கு என்னை அழைத்தால் வருவேன். ஊடகங்களும், தமிழ் மக்களும் ஸ்டெர்லைட் புரட்சியில் பங்கு பெறுவது கடமை. ஊடகங்கள் இந்த போராட்டத்துக்கு முழு ஆதரவு தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.