stdents write their exam thriugh tablet in ramanathapuram
அரசு பள்ளி மாணவர்களின் திறமையினை வளர்க்கும் வகையில் கையடக்க கணினி மூலம் தேர்வு எழுதும் முன்னோடி திட்டம் ராமநாதபுரம் நகராட்சி பள்ளியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம் தமிழக பள்ளிகளில் பயிற்றுவிக்கும் முறை மற்றும் பயிலும் முறையில் , பல புதிய மாற்றங்கள் நடைமுறை படுத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி புத்தகங்கள் இன்றி கையடக்க கணினி டெப்லட் மூலம் பாடங்களை பதிவேற்றி அவற்றின் மூலம் கற்பதுடன் தேர்வு எழுதும் முறையும் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் முன்னோட்டமாக ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 10 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் ராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப் பள்ளியும் ஒன்று.

இந்த பள்ளியில் 1 முதல் 3 வரையில் உள்ள வகுப்புகளில் பயிலும் 81 மாணவ மாணவிகள் நேற்று டேப்லட் கையடக்க கருவி மூலம் தேர்வு எழுதினர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அப்பள்ளியின் தலைமை ஆசிரியை அனைவருக்கும் கல்வி திட்டத்தின் முன்னோட்ட திட்டமாக கையடக்க கணினி மூலம் பாடம் பயிலும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதற்கென பயிற்சி புத்தகங்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்த புத்தகங்களில் உள்ள பாடங்களை க்யூ.ஆர் குறியீடு மூலம் ஸ்கேன் செய்வதன் மூலம் கையடக்க கணிணியில் பதிவேற்றம் செய்யப்படும். இவ்வாறு பதிவேற்றம் செய்யப்பட்ட பாடங்களில் இருந்து 20 மதிப்பெண்களுக்கான தேர்வினை மாணவ மாணவிகள் இந்த கையடக்க கணினி மூலம் எழுதுகின்றனர். இன்று துவங்கிய தமிழ் தேர்வு உள்ளிட்ட அனைத்து பாட தேர்வுகளையும் கையடக்க கணினியில் எழுத உள்ளனர் என தெரிவித்தார்.

தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தரத்தை உயர்த்த தமிழக அரசும், ஆசிரியர்களும் எடுத்து வரும் முயற்சி பொது மக்கள், பெறோர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
