Asianet News TamilAsianet News Tamil

35 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணா சாலையில் கருணாநிதிக்கு மீண்டும் சிலை.. சிலிர்க்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின்!

எம்.ஜி.ஆர். மறைவின்போது அண்ணா சாலையில் தகர்க்கப்பட்ட கருணாநிதியின் சிலை 35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே சாலையில் நிறுவப்படுகிறது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Statue of Karunanidhi again in Chennai Anna Road after 38 years.!
Author
Chennai, First Published May 27, 2022, 10:47 PM IST

இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்சித் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “தமிழ்நாட்டின் மூத்த தலைவராகவும், திராவிட இயக்கத்தின் நெடும்பயணத்தில் முக்கால் நூற்றாண்டுக்கு மேல் ஓய்வின்றி உழைத்தவருமான கலைஞருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் திருவுருவச் சிலை திறக்கப்படும் நாள் (மே 28), நம் அனைவருக்கும் தித்திப்பான நாள்! திசையெல்லாம் மகிழ்ச்சி பரவிடும் நாள்! ‘உடன்பிறப்பே..’ என்று தமது காந்தக் குரலால் அவர் நம்மை பாசத்துடன் அழைப்பது போன்ற உணர்வைப் பெறுகின்ற திருநாள்! ஐந்தாவது முறை அவர் முதல்வராகப் பொறுப்பு வகித்தபோது, சென்னை அண்ணா சாலையில், எந்த ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகத்தை எழிலுடனும் வலிவுடனும் அமைத்தாரோ, அந்த ஓமந்தூரார் அரசினர் தோட்டத்திலேயே அவருடைய திருவுருவச் சிலையை, தமிழ்நாட்டு முதலமைச்சர் என்ற பொறுப்பினைச் சுமக்கும் உங்களில் ஒருவனான என் தலைமையில், கழகத்தின் பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான அண்ணன் துரைமுருகன் வரவேற்புரையாற்றிட, இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு திறந்து வைத்திட இருக்கிறார்கள். 

Statue of Karunanidhi again in Chennai Anna Road after 38 years.!

ஆங்கிலேயர் ஆட்சியில் ‘மவுண்ட் ரோடு’ எனப் பெயரிடப்பட்டு, உருவாக்கப்பட்ட சென்னையின் இதயப் பகுதிக்கு, ‘அண்ணா சாலை’ என்று பெயர் சூட்டியவரே நம் ஆருயிர்த் தலைவர்தானே! தமிழ்நாடு என்று இந்த மாநிலத்திற்கே பெயர் சூட்டிய பேரறிஞர் பெருந்தகையின் பெயரினைத் தமிழ்நாட்டின் தலைநகரின் இதயம் போன்ற முக்கியச் சாலைக்குச் சூட்டி, பெருமை சேர்த்தவர் கலைஞர். இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டினை சென்னையில் நடத்தி, கடற்கரையில் தமிழ்ச் சான்றோர்களுக்கு சிலை அமைத்த முதல்வர் அண்ணாவுக்கு அண்ணா சாலையில் சிலை அமையக் காரணமாக இருந்தவரும் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர்தான். தந்தை பெரியாருக்கு அண்ணா சாலையில் சிம்சன் நிறுவனம் அருகே, திமுக சார்பில் சிலை அமைத்து சிறப்பு சேர்த்தவரும் கலைஞர்தான்.

அண்ணா சாலை ஜிம்கானா கிளப் அருகே பெருந்தலைவர் காமராசருக்கு சிலை அமைப்பதற்குத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேருவால் காமராசர்  சிலை திறந்து வைக்கப்பட்டது. தமிழ்நாட்டின் தனிப் பெருந்தலைவர்களுக்கு அண்ணா சாலையில் சிலை அமைந்திடக் காரணமாக இருந்த கலைஞருக்கு ஒரு சிலை அமைத்திட வேண்டும் என்பது தந்தை பெரியாரின் எண்ணம். பெரியார் மறைவெய்திய பிறகு, அன்னை மணியம்மையார் முயற்சி எடுத்து, திராவிடர் கழகத்தின் சார்பில் அண்ணா சாலையில் (இன்றைய தாராப்பூர் டவர்ஸ் சிக்னல் அருகே) கலைஞருக்கு சிலை அமைக்கப்பட்டது. தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். உடல்நலக்குறைவால் 1987-ஆம் ஆண்டு மறைவெய்தியபோது, அரசியல் காழ்ப்புணர்வு கொண்ட சில தீயசக்திகளால், அன்றைய அரசின் காவல்துறையின் முழு ஒத்துழைப்புடன் கலைஞரின் சிலையைக் கடப்பாரை கொண்டு தாக்கி, தகர்த்தெறிந்த அக்கிரமத்தை அண்ணாசாலை மவுன சாட்சியாகப் பார்த்துக் கொண்டிருந்தது.

Statue of Karunanidhi again in Chennai Anna Road after 38 years.!

கழகத்தினர் துடித்தனர். “எம்.ஜி.ஆர். உடல்நலமில்லாமல் இறந்ததற்குக் கலைஞர் சிலையை ஏன் உடைக்க வேண்டும்?” என்று பொதுமக்களும் கேட்டனர். எவனோ ஒருவன் தலைவரின் சிலையைத் தகர்க்கும் புகைப்படம் நடுநிலை ஏடுகளில் வெளியாகி, தமிழ்நாட்டையே கலங்க வைத்தது. தலைவர் கலைஞரோ, “செயல்படவிட்டோர் சிரித்து மகிழ்ந்தாலும்.. அந்த சின்னத் தம்பி என் முதுகில் குத்தவில்லை. நெஞ்சில்தானே குத்துகிறான். அதுவரையில் நிம்மதி எனக்கு” என்று காலம் கிழித்துப்போட முடியாத கவிதையினை வடித்து வழங்கினார். அந்த அண்ணா சாலையில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும்  கலைஞர் திருவுருவச் சிலை நிறுவப்படுகிறது. வரலாற்றின் பக்கங்களிலிருந்து எவராலும் அகற்ற முடியாத தனிப்பெரும் சாதனையாளர் - தளராத உழைப்பாளி - சமரசமில்லாத சமூகநீதிப் போராளி நம் உயிர் நிகர் தலைவரின் திருவுருவச் சிலை திறக்கும் நிகழ்வு, சென்னையில் மகத்தான விழாவாக நடைபெறுகிறது.

மாபெரும் தலைவருக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் திருவுருவச் சிலை திறக்கப்படுவதை எண்ணி, உங்களைப் போலவே நானும் மகிழ்கிறேன்; நெகிழ்கிறேன்! முதலமைச்சர் என்ற முறையில் விழாவை சிறப்பித்துத் தர வேண்டும் என உடன்பிறப்புகளான உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்” என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios