ஸ்டாலின் தான் எங்க கட்சியின் கொ.ப.செ!: செமத்தியாக நக்கலடித்த எடப்பாடியார்.
அ.தி.மு.க.வை பற்றி நாங்கள் விளம்பரம் செய்ய தேவையில்லை. தினமும் தி.மு.க. தலைவர் ஸ்டாலினே விளம்பரம் செய்து கொடுக்கிறார். ஸ்டாலினுக்கு விவசாயி என்றாலே என்ன எரிச்சல்னு தெரியலை.
*நான் அடிக்கடி கட்சி மாறுகிறேன்! என என் மீது விமர்சனம் வைக்கப்படுகிறது. அது சரியல்ல, முற்றிலும் தவறு. நான் இந்த முடிவை முழுக்க முழுக்க மக்கள் நலனுக்காகத்தான் எடுக்கிறேன். விமர்சனம் செய்பவர்கள் பற்றி எனக்கு கவலையில்லை. மக்களுக்கு எங்கே நன்மை கிடைக்குமோ அங்கே இணைந்து சேவை செய்வதே என் இலக்கு!-ராஜகண்ணப்பன் (மாஜி அ.தி.மு.க. அமைச்சர்)
*முஸ்லிம் மக்களின் நலனில் இ.பி.எஸ். அரசு அக்கறை காட்டி வருகிறது. புனித ஹஜ் பயணம் மேற்கொள்வோர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்! என மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார் முதல்வர். அதுபோல பிற மாநிலங்களில் காலியாக உள்ள இடங்களை பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதி பெற்றுத் தர வேண்டும். -அபுபக்கர் (இந்திய ஹன் அசோசியேஷன் தலைவர்)
*டில்லி கலவரம் மிகவும் கவலையளிக்கிறது. அமைதியான போராட்டமே ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு அவசியம். வன்முறையால் எந்த பிரச்னைக்கும் தீர்வு கிடைக்காது. வன்முறையை கைவிட்டு, கலவரக்காரர்களிடம் இருந்து டில்லி மக்கள் விலகியிருக்க வேண்டும். -ராகுல் காந்தி (மாஜி காங்கிரஸ் தலைவர்)
*விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரங்களை அமைத்து, விவசாய நிலங்களை சின்னாபின்னப்படுத்தியது யார்? முதல்வர் இ.பி.எஸ். அரசுதான். முதல்வர் எடப்பாடியார் தன்னை விவசாயி என சொல்லிக் கொள்வதால் விவசாயிகள் தலை கவிழ்கின்றனர். ஒரு ஊழல்வாதி, தன்னை விவசாயி என சொல்லிக் கொள்வதை அவர்கள் விரும்பவேயில்லை. -கே.என்.நேரு (தி.மு.க. தலைமை அமைப்புச் செயலாளர்)
*ஆம் ஆத்மி கட்சி ஆரம்பிக்கப்பட்ட போது தமிழகத்தில் எங்களோடு இருந்தவர்கள் இப்போது இல்லை. காரணம், தமிழக அரசியலில் உடனடியாக அவர்கள் பெரிய மாற்றத்தை எதிர்பார்த்தனர். அது நடக்காததால் வெளியேறிவிட்டனர். என்றாலும் கூட தமிழகத்தில் எங்கள் கட்சி வலுப்பெற்றுள்ளது. வசீகரன் (ஆம் ஆத்மி கட்சியின் தமிழக பிரிவு தலைவர் வசீகரன்)
*சிஏஏ மசோதாவை சட்டமாக்கிவிட்டார்கள். எனவே இனிமேல் அதை திரும்பப் பெற மாட்டார்கள். இனி என்ன போராடினாலும், எந்த பலனுமில்லை! இப்படி நான் சொல்வதால் நான் பா.ஜ.க.வின் ஆள், என் பின்னால் பா.ஜ.க. இருக்கிறது என்பார்கள். சில மூத்த பத்திரிக்கையாளர்களே இப்படி சொல்வது வேதனையளிக்கிறது. எது உண்மையோ அதைத்தான் நான் சொல்கிறேன். - ரஜினிகாந்த் (நடிகர்)
*குடியுரிமை சட்ட மசோதாவை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். ‘இஸ்லாமியர்களுக்கு இங்கு வாழ உரிமை இல்லை. நாடு கடத்த வேண்டும் அவர்களை’ என்று அந்த மசோதாவில் சொல்லவில்லை. வீண் வதந்திகளை கூறி, அரசியல் நோக்கத்தில் எதிர்க்கட்சிகள் சதி செய்கின்றன. வன்முறை எந்த ரூபத்தில் நடந்தாலும் அதை கட்டுப்படுத்த வேண்டியது அரசின் கடமை.-சரத்குமார் (சமத்துவ மக்கள் கட்சி தலைவர்)
*சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களில் தகுதியானவர்களை நிரப்பாமல், ஓய்வு பெற்ற பேராசிரியர்களை மீண்டும் பணியமர்த்திட பல்கலை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனால் திறமையான இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. - ராமதாஸ் (பா.ம.க. நிறுவனர்)
*குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு ஆதரவு அளித்ததன் முலம், தமிழக மக்களுக்கு அ.தி.மு.க. வரலாற்று துரோகத்தை செய்துவிட்டது. இந்த விவகாரத்தில் ஆளும் அரசு பெரும் கபட நாடகம் ஆடுகிறது. இதற்கான தண்டனையை தேர்தலில் மக்கள் நிச்சயம் தருவார்கள்.
-ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் தலைவர்)
*அ.தி.மு.க.வை பற்றி நாங்கள் விளம்பரம் செய்ய தேவையில்லை. தினமும் தி.மு.க. தலைவர் ஸ்டாலினே விளம்பரம் செய்து கொடுக்கிறார். ஸ்டாலினுக்கு விவசாயி என்றாலே என்ன எரிச்சல்னு தெரியலை. நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். அப்படின்னா விவசாயின்னுதானே என்னை சொல்லணும்! இது ஸ்டாலினுக்கு பிடிக்கலை. -எடப்பாடி பழனிசாமி (தமிழக முதல்வர்)