கருணாநிதியின் செல்ல மகளும், தி.மு.க.வின் மாநில மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியின் எம்.பி.யுமான கனிமொழிக்கு, அவரது அப்பாவால் உருவாக்கப்பட்ட சென்னை அண்ணா அறிவாலயத்திலோ, அறிவகத்திலோ ஒரு நாற்காலி போட்டு உட்காரும் அளவுக்கு கூட அறை ஒதுக்கப்படவில்லை! இது கனிமொழியை கண்டபடி அவமதிக்கும் செயல்! என்று தி.மு.க.வில் திடீரென வெடித்திருக்கும் விவகாரமானது ஸ்டாலினுக்கு எதிராக வில்லங்க ரூட்டில் செல்வதுதான் பிரச்னையே. தங்கள் தலைவி கனிமொழிக்கு அறை ஒதுக்காமல், அவமதிப்பதற்கான காரணமாக சிலவற்றைச் சொல்லும் தி.மு.க. மகளிரணியினர் சிலர் “அக்கா கனிமொழி எங்கள் அணிக்கு தலைமை பொறுப்பேற்ற பின் ஏக எழுச்சியோடு செல்கிறது அணி. தூத்துக்குடியில் அக்காவை எதிர்த்து பா.ஜ.க.வின் மாநில தலைவராக இருந்த தமிழிசையே போட்டியிட்ட போதும், பெரும் வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்தார் கனிமொழி. இன்று  தூத்துக்குடி மக்களுடன் எல்லா பிரச்னையிலும் உடன் நின்று செயல்படும் அவரை தமிழகத்தின் அத்தனை மக்களும் ஆச்சரியமாக பார்க்கின்றனர்.

 

கனிமொழி தி.மு.க.வின் மிக முக்கியம பெண் முகமாக வளர்ந்து வருகிறார். மத்திய பா.ஜ.க. அரசை மற்றும் தமிழக அ.தி.மு.க. அரசை எந்த தயக்கமுமின்றி விமர்சித்து வருவதால் எதிர்க்கட்சிகளும் அவரை உயர்வாய் பார்க்கின்றனர்.  இப்பேர்ப்பட்ட தலைவிக்கு, அவரது சொந்த கட்சியின் தலைமை அலுவலகத்தில் சொந்தமாக ஒரு நாற்காலி கூட ஒதுக்கப்படவில்லை என்பது தலைமைக்கு அசிங்கம். தலைவர் ஸ்டாலினுக்கு அண்ணா அறிவாலயத்தில் அறை இருப்பது அவசியம், அழகும் கூட. ஆனால்  சில ஆண்டுகளாக தன் வீட்டில் படுக்கையிலிருக்கும் பொதுச்செயலாளர் அன்பழகனுக்கும் இங்கே அறை இருக்கிறது. பொருளாளர் துரைமுருகனுக்கும் அறை இருக்கிறது. துணைப்பொதுச்செயலாளர்கள் மூவருக்கு என்று கூட்டாக ஒரு அறை உள்ளது. இது தவிர அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதிக்கு தனி அறை, கே.என். நேருவுக்கு தனி அறை என்று கொடுத்துள்ளார்கள். 

ஆனால் தலைவர் கலைஞரின் மகளான அக்கா கனிமொழிக்கு மட்டும் ஏன் அறையில்லை? அப்படியென்றால் கனியக்காவின் அரசியல் வளர்ச்சியை பார்த்து தலைமையே தயங்குகிறது, பொறாமைப்படுகிறது, பயப்படுகிறது என்றுதானே அர்த்தம். அறை ஒதுக்கினால் அவர் தினமும் அலுவலகத்துக்கு வருவார், மகளிரணியினர் வருவர், கூட்டணி கட்சி தலைவர்கள் தலைவர் ஸ்டாலினை பார்த்த கையோடு அக்காவையும் மரியாதை நிமித்தமாக பார்ப்பர், மீடியாக்கள் அவரை பேட்டி எடுக்கும், இப்படி மளமளவென வளர்ந்துவிடுவார்! எப்போதுமே தமிழகத்தில் பெண் அரசியல்வாதிகளுக்கு மக்கள் அமோக ஆதரவு கொடுப்பார்கள், இதன் மூலம் கனிமொழி தலைமைக்கு போட்டியாக வந்துவிடுவாரோ என்று பயப்படுகிறார்கள். அந்த பயமே இந்த அறை ஒதுக்காமைக்கு காரணம். ஆனால் புயலை நீண்டநாளுக்கு அடக்கி வைக்க முடியாது.” என்கிறார்கள். சிக்கல்தான்!