திமுக தலைவர் ஸ்டாலினிடம் எவ்வளவுதான் பண பலம் இருந்தாலும், அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் குறைந்தது ஒரு எதிர்க்கட்சித் தலைவராகக் கூட அவரால் வர முடியாது என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார். 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு, குட்கா ரெய்டு, நெடுஞ்சாலை துறை ஊழல், ஓபிஎஸ் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு, மின்வெட்டு, எஸ்.பி.வேலுமணியில் உள்ளாட்சி ஊழல்கள் என தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசு ஆட்டம் கண்டு வருகிறது.

ஒரு புறம் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு விஸ்வரூபம் எடுத்துள்ள ஸ்டாலின், குடைச்சல் கொடுக்கும் டி.டி.வி.தினகரன், கைவிட்டுவிட்ட பாஜக என பெரும் நெருக்கடிகளையும் எடப்பாடி அரசு சந்தித்து வருகிறது. விரைவில் இந்த ஆட்சி கவிழும் என்று ஸ்டாலினும், டி.டி.வி.தினகரனும் பயமுறுத்தி வருகின்றனர். ஆனாலும் அசராத அமைச்சர்கள் ஸ்டாலினுக்கும், டி.டி.வி.தினகரனுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் மதுரையில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றும் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, உள்ளாட்சித் துறை ஊழல் குறித்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா என சவால் விடுத்துள்ளார். அடுத்து வரும்  சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக கூட வர முடியாது என்றும் திமுக படுதோல்வியைச் சந்திக்கும்  எனவும் விமர்சனம் செய்தார். திமுக தலைவர் ஸ்டாலினால் அழகிரியையே  சமாளிக்க முடியாத நிலையில் அ.தி.மு.க.வினரை அவர் எப்படி  சமாளிப்பார் என கேள்வி எழுப்பினார்.மேலும், ஸ்டாலினிடம் உள்ள பண பலம் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்றும் தெரிவித்தார்.

ஆளும் அம்மா ஆட்சியை அகற்ற நினைக்கும் ஸ்டாலினுக்கும் டிடிவி.தினகரனுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரத்தை அதிமுக அரசு தருகிறது. நாங்கள் எதிரியை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்த செல்லூர் ராஜு  திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் இடைத்தேர்தலில் நாங்கள் யார் என்று நிரூபிப்போம் என்றும் கூறினார்.