1969ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி திமுக தலைவராக மு.கருணாநிதி பொறுப்பெற்றுக் கொண்டார். 11வது முறையாக தொடர்ந்து தலைவராக இருந்துவரும் அவர், பதவி ஏற்று நாளையுடன் 49ஆண்டுகள் முடிந்து 50ஆவது ஆண்டு தொடங்கவுள்ளது. பொன்விழா கொண்டாட்டங்கள் குறித்து திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக தொண்டர்களுக்கு  ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், திமுக தலைவராக கருணாநிதி பொறுப்பேற்ற சூழ்நிலைகளை விளக்கியுள்ளார். ”திமுக சட்டதிட்டங்களில் உரிய திருத்தங்கள் செய்யப்பட்டு, உட்கட்சி ஜனநாயக மரபுகளையொட்டி, கருணாநிதி முறைப்படி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 49 ஆண்டுகள் நிறைவுற்று, 50 ஆம் ஆண்டு தொடங்குகிறது.ஓர் மாபெரும் மக்கள் இயக்கத்தின் தலைவராகப் பொன்விழா காணும் வாய்ப்பு, இந்திய அரசியல் வரலாற்றில் இணையேதுமில்லாத சாதனைகள் பல புரிந்த தலைவரான நம் அருமைத் தலைவருக்கே வாய்த்திருக்கிறது.

“தனது உடன்பிறப்புகள்-குடும்பத்தினர் எனப் பலரும் சிறைக்கொடுமைக்குள்ளான நிலையிலும் மனம் தளராமல், நெருக்கடி நிலையை எதிர்த்து நின்று, சென்னை அண்ணா சாலையில் தன்னந்தனியாக உரிமைக்குரல் எழுப்பி, துண்டுப் பிரசுரங்களை வழங்கிய போராளிதான் நம் தலைவர் கருணாநிதி.

”பொதுவாழ்வில் 80 ஆண்டுகள், முரசொலி பத்திரிகை நிறுவனராக பவளவிழா, கலைத்துறையில் 70 ஆண்டுகள், சட்டப்பேரவை பணிகளில் வைர விழா ஆகியவற்றைக் கடந்து ஓய்வறியாமல் உழைத்த அவருக்கு, காலம் சற்று ஓய்வளித்திருக்கிறது. முதுமையின் காரணமாக அவரது உடல்நலம் குன்றியிருக்கிறது. அரை நூற்றாண்டு காலமாக திமுக தலைவர் என்ற முறையில், என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே எனப் பொங்கும் பெருங்கடலெனத் திரண்ட தமிழ் மக்களை நோக்கி ஒலித்த அந்த காந்தக் குரலை எப்போது கேட்போம் என ஒவ்வொருவரும் ஏங்கித் தவிக்கிறோம்”  காலமும், மருத்துவ அறிவியலும் நம் ஏக்கத்தைத் தணிக்கும் என்ற நம்பிக்கையுடன் தலைவர் கருணாநிதி வகுத்துத்தந்த பாதையில் திமுக பயணிக்கிறது. தலைவர் கருணாநிதியின் நெஞ்சில் திமுகவின் ஒவ்வொரு உடன்பிறப்பும் இருக்கிறார்கள். ஒவ்வொரு உடன்பிறப்பின் நெஞ்சிலும் தலைவர் கருணாநிதி இருக்கிறார்.

”எப்போதும் இதயத்தில் நிறைந்திருக்கும் தலைவர் கருணாநிதியின் தலைமைப் பொறுப்பின் பொன்விழாவைப் போற்றிக் கொண்டாடுவோம். அவரது லட்சியப் பாதையில்-ஜனநாயக வழியில் தொடர்ந்து தொண்டாற்றி, திமுக அரசை விரைவில் அமைப்போம்! அந்த வெற்றியை தலைவர் கருணாநிதிக்குக் காணிக்கையாக்கி, பொன்விழா நாயகரின் புகழைப் புவியெங்கும் எதிரொலிக்கப் பாடிப் பூரிப்படைவோம்” என்று தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.