காவிரி விவகாரத்தில் நேரில் சந்தித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கையை முன்வைக்க நேரம் ஒதுக்குமாறு பிரதமர் மோடிக்கு திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்துவருகின்றன. இதற்கிடையே தமிழக அரசு சார்பில் கூட்டப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், பிரதமரை முதல்வர் தலைமையிலான அனைத்து கட்சி தலைவர்கள் சந்திக்க நேரம் கோரப்பட்டது. ஆனால், பிரதமர் நேரம் ஒதுக்கவில்லை என ஸ்டாலினிடம் முதல்வர் தெரிவித்ததாக ஸ்டாலின் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே பிரதமரை சந்திக்க நேரமே கேட்கப்படவில்லை என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். பொன்.ராதாகிருஷ்ணனின் கூற்று பொய்யாக இருந்தால் முதல்வரும் துணை முதல்வரும் மறுப்பு தெரிவிக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், ஆளுநர் பன்வாரிலை சந்தித்து திமுக தலைமையிலான தோழமை கட்சிகளின் சார்பில் ஒரு மனு அளிக்கப்பட்டது. அதில், மேலாண்மை வாரியம் அமைக்குமாறு பிரதமரிடம் ஆளுநர் வலியுறுத்த வேண்டும் எனவும் பிரதமரை அனைத்து கட்சி தலைவர்கள் சந்திக்க நேரம் பெற்று தருமாறும் கோரப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நேற்று மூன்றாவது முறையாக திமுக தலைமையிலான தோழமை கட்சிகளின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, தமிழகத்தின் அனைத்து கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து காவிரி விவகாரத்தில், தங்களின் கோரிக்கையை நேரில் தெரிவிக்க ஏதுவாக சந்திக்க நேரம் ஒதுக்குமாறு பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக அரசு சார்பில் பிரதமரை நேரில் சந்திக்க எடுக்கப்பட்ட முடிவும் பலனளிக்கவில்லை. ஆளுநரிடம் கொடுத்த மனுவிற்கு பதிலில்லை என்ற நிலையில், ஸ்டாலினே நேரடியாக பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.