தி.மு.க தலைவராக வரும் செவ்வாயன்று மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்படுவது உறுதி என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
தி.மு.க தலைவராக வரும் செவ்வாயன்று மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்படுவது உறுதி என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே செயல் தலைவராக ஸ்டாலின் இருந்து வருகிறார். தி.மு.கவில் தலைவருக்கு இருக்கும் அனைத்து அதிகாரங்களும் செயல்தலைவருக்கும் உண்டு. இருந்தாலும் கலைஞரை பின்பற்றி தானும் தலைவராக வேண்டும் என்பது தான் ஸ்டாலினின் இரண்டு லட்சியங்களில் ஒன்று. அந்த ஒரு லட்சியத்தை அடைவதற்கான சூழல் தற்போது ஸ்டாலின் வாழ்வில் அமைந்துள்ளது.
தி.மு.க தலைவராக இருந்த கலைஞர் மறைந்துவிட்டார். தற்போது தி.மு.கவில் தலைவர் பதவி காலியாக உள்ளது. விரைவாக அந்த பதவியில் சென்று அமர்ந்து விட வேண்டும் என்பது தான் ஸ்டாலினின் விருப்பமாக உள்ளது. இதற்காகவே வரும் செவ்வயான்று செயற்குழுவை கூட்டியுள்ளார் ஸ்டாலின். செயற்குழுவும் கூட ஸ்டாலின் தலைமையில் தான் நடைபெற உள்ளது. கலைஞருக்கு இரங்கல் தெரிவிக்கவே செயற்குழு என்று ஸ்டாலின் கூறி வருகிறார்.

ஆனால் உண்மையில் செயற்குழு கூடப்போவது ஸ்டாலினை தலைவராக தேர்வு செய்யத்தான். தி.மு.கவின் பொதுச் செயலாளராக இருக்கும் அன்பழகன் செயற்குழுவில் ஸ்டாலினை தலைவராக முன்மொழிய உள்ளார். முதன்மைச் செயலாளர் துரைமுருகன் அதனை வழிமொழிய, ஒட்டு மொத்த செயற்குழு உறுப்பினர்களின் ஆதரவுடன் ஸ்டாலின் தலைவராக தேர்வு செய்யப்பட இருக்கிறார் என்பது தான் தற்போது தி.மு.க வட்டாரங்களின் விவாதிக்கப்படும் ஹாட் டாபிக்காக உள்ளது.
இதற்காகவே இன்று காலையில் அன்பழகனை சந்தித்து ஸ்டாலின் பேசியுள்ளார். அன்பழகனும் அதற்கு ஓ.கே சொல்லிவிட அவர் காலில் விழுந்து ஸ்டாலின் ஆசியும் பெற்றுள்ளார். பொதுக்குழுவை கூட்டும் வரை தலைவர் பதவியை காலியாக வைத்திருப்பது நல்லது அல்ல என்பதால் தான் செயற்குழுவை கூட்டி தலைவராகிவிடலாம் என்று ஸ்டாலின் முடிவெடுத்துள்ளார். பின்னர் பொதுக்குழுவை கூட்டி செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுக்கு ஸ்டாலின் ஒப்புதல் பெற உள்ளார்.
மின்னல் வேகத்தில் செயல்பட்டு தலைவர் பதவியை கைப்பற்றிவிட்டால் பின்னர் குடும்பத்தில் உள்ளவர்கள் எதிர்த்தாலும் கூட இருக்கும் நேரத்தை பயன்படுத்தி பொதுக்குழுவில் அனைத்தையும் சுமூகமாக்கிவிடலாம் என்பது தான் ஸ்டாலினின் கணக்கு. மேலும் பொருளாளர் பதவியையும் ஸ்டாலின் தற்போது கைவசம் வைத்துள்ளார். தலைவரான பிறகு பொருளாளர் பதவியை ஸ்டாலின் யாரிடம் கொடுப்பார் என்கிற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு நிச்சயம் ஸ்டாலின் தனது குடும்பத்தை சேர்ந்த ஒருவரைத்தான் பொருளாளராக நியமிப்பார் என்றும் சொல்லப்படுகிறது.
