களத்தில் இல்லாதவர்கள் கபடி பாடிக்கொண்டிருக்கிறார். களப்பணியாளர்கள் மீது ஸ்டாலின் சேற்றை வாரி இறைப்பதை மக்கள் யாரும் விரும்பவில்லை என்று அமைச்சர்  உதயக்குமார் கடுமையாக சாடியுள்ளார்.


திருவொற்றியூர் மண்டலத்தில் புதிய கொரோனா பரிசோதனை மையத்தையும் மாத்தூரில் நடைபெற்ற மருத்துவ முகாமையும் திறந்து வைத்து பேசிய அமைச்சர் ஆர்.பி உதயக்குமார்.." மருத்துவர்கள் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் நாட்டுமக்களுக்காக சேவை செய்து வருகிறார்கள். மருத்துவர்களின் சேவையானது கடவுளுக்கு நிகரானது.தூய்மை பணியாளர்கள் வருவாய்த்துறையினர் காவல் துறையினர் தங்களது உயிரை பணயம் வைத்து பணியாற்றி வருகிறார்கள்.


தமிழக முதல்வர் தினசரி தமிழகம் முழுவதும் உள்ள நிர்வாக பணிகளையும் கவனித்துக்கொண்டு களத்தில் உயிரை பணயம் வைத்து கொரோனா பணிகளில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் வீட்டில் இருந்து நீண்ட நாட்களாக களத்தில் இல்லாத ஒருவர் முதல்வரை ராஜினாமா செய்ய வேண்டும் என அறிக்கை விடுகிறார். அவரது அறிக்கை குழப்பங்களை ஏற்படுத்தும். களப்பணியாளர்கள் மீது சேற்றை வாரி இறைப்பதை மக்கள் யாரும் விரும்பவில்லை. ராணுவ வீரன் தாய்நாட்டை காப்பது போல நாங்கள் இங்கே தமிழக மக்களை காத்து வருகிறோம். தவறு செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன் என்று புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பாடி பாடலைப்போல் புரட்சித்தலைவர் பாணியில் அம்மாவின் ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது.


களத்தில் இல்லாதவர்கள் கபடிபாடிக்கொண்டே ஆட்சியையும் அதன் நிர்வாகத்தையும் குறை கூறுவது சரியல்ல.
சாத்தான்குளம் விசயத்தில் தமிழக அரசு நீதிமன்ற உத்தரவுப்படி சரியாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.எங்கள் மீது அநியாயமாக பழி சுமத்துகிறார்கள். இது நியாயம்தானா? அவர்களுக்கு உயிர் எவ்வளவு முக்கியமோ அதே போல் எங்களுக்கும் அந்த உயிர் முக்கியமாக இருக்கிறது.சாத்தான்குளம் சம்பவத்தை உலகமே உற்று நோக்குகிறது.எந்த வித குறுக்கீடும் இல்லாமல் விசாரணை நடைபெற்று வருகிறது. என்றார்.