திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் அவர் இன்னும் பிஸியாகிவிட்டார். செயல் தலைவராக இருக்கும் போதே ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பம்பரமாக சுழன்று பணியாற்றுவார். இப்போது தலைவராகிவிட்டார் அவரைப் பிடிக்க முடியுமா என்ன- அவர் அத்தனை பிஸி.

அதுபோக அடுத்தடுத்து நாடாளுமன்றத் தேர்தல்…இடைத் தேர்தல் என அவரது பணி மிக அவசியமாகிவிட்டது. காங்கிரசுடன்… மம்தா பானர்ஜி கூட்டியுள்ள பாஜகவுக்கு எதிரான  கூட்டணி… சந்திர பாபு நாயுடுவுடன் பேச்சு வார்த்தை என நாட்டில் உள்ள முக்கிய தலைவர்களில் ஒருவராகிவிட்டார்.

இந்நிலையில்தான் பாஜகவுக்கு எதிராக நாட்டில் உள்ள  எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று கொல்கத்தாவில் நடைபெறுகிறது. மேற்கு வங்க முதலமைச்சர்  மம்தா பானர்ஜி ஏற்பாடு செய்துள்ள இக்கூட்டத்திலும், பேரணியிலும் கலந்துகொள்வதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனி விமானம் மூலம் நேற்று கொல்கத்தா புறப்பட்டுச் சென்றார்.

முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, ஸ்டாலின் மருமகன் சபரீசன் மற்றும் நாகராஜன், சுனில் ஆகியோரும் ஸ்டாலினுடன் சென்றனர்.

ஸ்டாலின் கொல்கத்தா சென்ற அந்த தனி விமானம் முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமியின்  உறவினருக்கு சொந்தமானது.

திரிவேணி எர்த்மூவர்ஸ் என்ற தனி விமானத்தில் அவர் கொல்கத்தா சென்றுள்ளார். ஸ்டாலினின் பயண ஏற்பாடுகளை பத்ரா நிறுவனம் செய்திருப்பதாகவும், விமானத்திற்கு ஒரு மணி நேரத்திற்கான வாடகை நான்கரை லட்சம் என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சேலத்தில் நடைபெற்ற தன்னுடைய உதவியாளர் தினேஷ் திருமணத்திற்கும், இதே நிறுவனத்திற்குச் சொந்தமான தனி விமானத்தில்தான் ஸ்டாலின் சென்றுவந்தார். தற்போது இரண்டாவது முறையாக எடப்பாடி பழனிசாமியின் உறவினருக்கு சொந்தமான இந்த விமானத்தில் ஸ்டாலின்  இரண்டாவது முறையாக பயணம் செய்துள்ளார்..