அமைச்சராக தனது செயல்பாடுகளில் தவறு இருந்தால் விமர்சிக்கலாம் என்றும், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சிக்க மு.க.ஸ்டாலினுக்கு என்ன தகுதி இருக்கிறது என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசமாக பேசியுள்ளார். 

திமுக.வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சித்து கட்டுரை வெளியிடப்பட்டது. இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர் "என்னைப் பற்றி தனிப்பட்ட விமர்சனம் செய்கிறார். என்னைப் பற்றிப் பேசுவதற்கான தகுதி மு.க.ஸ்டாலினுக்கு இல்லை. ஸ்டாலின் காந்தியும் இல்லை, நான் புத்தனும் இல்லை. தனிப்பட்ட வழக்கை குறித்துப் பேச வேண்டுமென்றால், ஸ்டாலின் குறித்து இந்த ஆண்டு முழுவதும் பேசலாம். என் பணிகளில் குறைகள் இருந்தால் அதனைச் சுட்டிக் காட்டட்டும்.

ஆனால், நான்கு வார்த்தையை ஒழுங்காகப் பேசத் தெரியாத எதிர்க்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலின், நா குழறி என்னைப்பற்றி தனிப்பட்ட முறையில் விமர்சிக்கிறார். தனிப்பட்ட முறையில் பேச வேண்டுமென்றால் அவர் மேடை அமைக்கட்டும். அவர் என்னைக் குறித்துப் பேசட்டும், நான் அவரைப் பற்றிப் பேசுகிறேன். இந்த உருட்டல் மிரட்டலுக்கு நான் பயப்படமாட்டேன்.

மூன்றாம் தரப் பத்திரிகையான முரசொலியில் என்னைப் பற்றி எழுதுகின்றனர். நான் ஊர், பெயர் தெரியாதவனா? நான் தமிழகத்தின் குடிமகன். மு.க.ஸ்டாலின் எங்கிருந்து வந்தார்? அவரது தலைவர் எங்கிருந்து வந்தார்? அவரது பூர்வீகம் என்ன? சொல்ல முடியுமா? தைரியம் இருக்கிறதா? நாவடக்கத்துடன் பேச வேண்டும். இதனை மீறிப் பேசினால், அதற்கான பதிலைத் தரத் தயாராக இருக்கிறோம். தைரியம் இருந்தால் என் பெயரைக் குறிப்பிட்டுப் பேசட்டும் என்றார். 

மேலும், உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது என பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்கள். ஆனால், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தேர்தலை நடத்தலாம் என உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது.  தேர்தலை சந்திக்க தைரியமில்லாமல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் ஆணையத்தை அச்சுறுத்தும் வகையில் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் என அமைச்சர் சி.விசண்முகம் கூறியுள்ளார்.