மேகதாதுவில் புதிய அணை கட்டுவது தொடர்பான அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததை கண்டித்து திமுக  மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்றுப் பேசிய  மு.க.ஸ்டாலின், அனைத்து கட்சி தலைவர்கள் இங்கு கூடியிருப்பது அரசியலுக்காக இல்லை. 1957-ல் கருணாநிதி சொன்னதை போல உழவனின் கண்ணீரை துடைப்பதற்காக தான். கஜா புயலால் தமிழகம் ஏற்கனவே கண்ணீர் வடித்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் மேகதாதுவில் அணை கட்ட போகும் செய்தி தமிழகத்தை கொந்தளிக்க வைத்திருக்கிறது என ஆவேசமாக தெரிவித்தார்.

தமிழகத்தில் இப்போது ஆட்சியில் இருக்கக்கூடிய  அதிமுக போர்க்குரல் எழுப்பியிருக்க வேண்டும். ஆனால் அதற்கு நேர்மாறாக தூங்கி கொண்டிருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான வழக்கில் இறுதி தீர்ப்பு வந்த பிறகாவது மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தடை பெறக்கூடிய புதிய மனுவை தமிழக அரசு தாக்கல் செய்து இருக்க வேண்டாமா? என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

மத்திய பாஜக  அரசு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருவதற்கு பல உதாரணங்களை சொல்லலாம். அண்மையில் 8 மாவட்டங்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்டது. தமிழகத்தில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து கொண்டிருக்கிறார்கள். இந்த பேரிடரில் இருந்து மக்களை மீட்க குறைந்தபட்சம் 20 வருடங்கள் ஆகும்.

இதைப்போல் பேரிடர் வேறு எந்த மாநிலத்திலாவது நடந்திருந்தால் மோடி பறந்து போயிருப்பாரா? மாட்டாரா?. தமிழகத்துக்கு ஏன் இன்னும் வரவில்லை? வேறு மாநிலமாக இருந்திருந்தால் ஆயிரக்கணக்கான கோடி நிவாரணமாக வழங்கியிருப்பாரா? மாட்டாரா? என கேள்வி எழுப்பினார்.

எந்த முகத்தை வைத்துக்கொண்டு தாமரை தமிழ்நாட்டில் மலரும் என்கிறார்கள்?. புல்லே வராத போது தாமரை மலர்ந்திடுமா?. மேகதாது பிரச்சினையில் தமிழகத்தை மோடி வஞ்சிக்க நினைத்தால் இனி தமிழகத்துக்கு எந்த சூழ்நிலையிலும் அவர் வர முடியாத நிலையை ஏற்படுத்துவோம். தமிழகம் காக்க, தஞ்சையை காப்போம். காவிரியை காக்க மேகதாதுவை தடுப்போம் என ஸ்டாலின் மிகக் கடுமையாக பேசினார்..