stalin warning cadres

எக்காரணத்தை கொண்டும் கட்சி நிகழ்ச்சி உள்பட எந்த விழாக்களுக்கும் ஆடம்பர பேனர்கள் வைத்தால், தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

ஆடம்பரங்கள் - அலங்காரங்களை தவிர்த்து எளிய முறையில் மக்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றத் துணை நிற்பதே நமக்குள்ள முக்கியப்பணி என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். மக்களுக்கு மனதளவில் எரிச்சலூட்டும் செயல்களை தவிர்க்க வேண்டியது பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ள திமுகவினரின் கடமை என்பதையும் சுட்டிக்காட்டி வந்துள்ளேன்.

பயனற்ற ஆடம்பரமான செயல்பாடுகள் மக்களிடம் வெறுப்பை உண்டாக்கி, நம்மை அவர்களிடம் இருந்து அன்னியப்படுத்தி விடும். அதில் முக்கியமாக நான் குறிப்பிடுவது, ஆடம்பரமும் அருவருப்பும் கலந்த பேனர் கலாச்சாரத்தைத்தான்.

வெற்று ஆடம்பரத்தை தவிர வேறெதுவும் இந்த பேனர் கலாச்சாரத்தில் இருப்பதில்லை. தேவையற்ற ஆடம்பரமான இத்தகைய செயல், பொதுமக்களிடம் கடும் வெறுப்பையும் அதிருப்தியையும் உண்டாக்கியுள்ளன.

மக்களின் வெறுப்புக்கு திமுகவினர் இடம் கொடுக்கவோ, அவர்களின் வெறுப்புக்கு ஆளாகவோ கூடாது என்பதற்காக, ஆடம்பரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில், அடிக்குஅடி பேனர் வைக்கும் கலாச்சாரத்தை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன்.

முழுமையாக தவிர்த்தால், திமுக நடத்தும் விழா பற்றிய விவரம் பொது மக்களுக்கு தெரியாது என நினைத்தால், நிகழ்ச்சி நடைபெறும் இடத்தையும் நேரத்தையும் சுட்டிக்காட்டும் வகையில் ஒருசில இடங்களில் மட்டும், பொதுமக்களுக்கு எவ்வித இடையூறுமின்றி பேனர்களை கவனத்துடன் வைக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தேன்.

அந்த பேனர்களில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கருணாநிதி, இனமானப் பேராசிரியர் ஆகியோரின் படங்கள் இடம் பெறவேண்டும் எனவும், என்னுடைய படங்களை தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினேன். காலில் விழுவதை நிறுத்த வேண்டும் என்றபோதும், பொன்னாடைகளுக்கு பதில் புத்தகங்கள் தர வேண்டும் என்ற போதும் அதன் உடனடி விளைவுகளை கண்டு பெருமிதம் கொள்ள முடிந்தது.

ஆனால், ஆடம்பர பேனர்களை தவிர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து பல மாதங்களான நிலையில் அதனை அலட்சியப்படுத்துவது போல அண்மை காலமாக சில நிகழ்ச்சிகளிலும் பேனர் கலாச்சாரம் மீண்டும் தலை தூக்கியிருப்பது வேதனையளிக்கிறது.

அதிகளவில் பேனர் வைப்பதும், அதிலும் தங்களுக்கு சுய விளம்பரம் தேடிக்கொள்ளும் வகையில் திமுக நிர்வாகிகள் பேனர் கலாச்சாரத்தை வளர்ப்பதும், தலைமையின் முடிவுக்கு எதிரானதும், மக்கள் மனதில் வெறுப்பை வளர்க்கின்ற செயலுமாகும் என்பதை உணர்த்த விரும்புகிறேன். உங்களில் ஒருவன் என்ற முறையில், இந்த பேனர் கலாச்சாரத்தைக் கைவிட வேண்டும் என மீண்டும் ஒருமுறை அன்பு வேண்டுகோள் விடுக்கிறேன்.

இந்த வேண்டுகோள் பயனளிக்கும் என உறுதியாக நம்புகிறேன். இனியும் திமுகவினர் யாரேனும் பேனர் கலாச்சாரத்தை கடைப்பிடித்தால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கவும் கடமைப்பட்டுள்ளேன். பேனர் கலாச்சாரத்தை வேரறுக்க உறுதியெடுப்போம்.

மக்களுக்காக நாம் மேற்கொள்கின்ற பணிகளும் அதன் மூலம் கிடைக்கின்ற ஆதரவும்தான் நிலையானது. ஆடம்பர விளம்பரங்களால் மக்களின் ஆதரவை பெற முடியாது என்பதை மீண்டும் நினைவூட்ட விரும்புகிறேன். கவர்ச்சி மாய வலையில் விழாமல், கடமைகளை நிறைவேற்றி மக்களின் மனங்களை வெல்வோம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.