வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40  மக்களவைத் தொகுதியில் தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் திமுக  தலைமையிலான கூட்டணி அமைந்துள்ளது. 

இதில் திமுகவுக்கு 20 தொகுதிகளும், காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதே போல் இடது சாரிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதியும், இந்திய ஜனநாயக கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொமதேக, மதிமுக ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுளளது.

இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிதம்பரம் தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவன் போட்டியிட உள்ளார். விழுப்புரம் தொகுதியில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் போட்டியிடுவார் என கூறப்படுகிறது.

இந்த இரண்டு தொகுதிகளை விசிகவுக்கு ஒதுக்கும்போதே உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று திருமாவிடம் அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் விசிக தனிச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என முடிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் தேர்தல் ஆணையத்திடம் தனிச் சின்னம் கேட்டு விண்ணப்பம் செய்திருந்தனர்.

இந்நிலையில் நாளை காலை திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிட இருந்த நிலையில் தற்போது விசிக தனிச் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று அடம் பிடித்து வருவதால், சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால் மீண்டும்  திமுக- விசிக இடையே  பேச்சு வார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்டுகிறது. இதனால் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியுடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.