stalin vs kerala government
கொங்கு மண்டல மாவட்டங்களுக்கு தண்ணீர் கொடுத்து வாழ வைக்கும் பவானி அணையின் குறுக்கே முக்கா முக்கா மூணு தடுப்பணைகளை கட்டி வருகிறது கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் அரசு.
இதை அரசு மற்றும் சட்ட ரீதியில் எதிர்ப்பதில் தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க. ஆமைக்கே சவால் விட்டு ஸ்லோவாக் போய்க் கொண்டிருக்கும் நிலையில் தி.மு.க. மட்டும் சில தோழமை கட்சிகளை சேர்த்து வைத்து போரடிக்கும் போதெல்லாம் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் கொங்கு மண்டலத்தில் தி.மு.க. சரிந்து கிடக்கும் நிலையில் ‘தளபதி நீங்க கோவைக்கு போங்க. அங்கேயிருந்து கேரளா எல்லைக்குள்ளே போயி நின்னு கேரளத்தை ஆளும் பினராயி அரசுக்கு எதிரா முற்றுகையை நடத்திடலாம். இது கொங்குல இருக்கிற பல லட்சம் மக்கள், விவசாயிகள் மத்தியில நம்ம கட்சி மேலே பெரிய மரியாதை ஏற்படுத்தும்.

இந்த ஐடியா பிடிக்கலேன்னா விடுங்க. நேரடியா திருவனந்தபுரம் போயி முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து தமிழகத்தோட கண்டனத்தை கடுமையா தெரிவியுங்க. இதுவும் கொங்கு மண்டலத்துல நம்ம கட்சிக்கு பெரிய பூஸ்ட்டை கொடுக்கும்.” என்று அவரது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலர் தொடர்ந்து ஐடியா கொடுத்திருக்கின்றனர்.
கொங்கு மண்டலத்தில் தி.மு.க.வின் வளர்ச்சிக்காக எதையும் செய்ய துடிக்கும் ஸ்டாலின் இந்த ஐடியாக்களை கண்டுகொள்ளாமல் புறந்தள்ளிவிட்டார். தளபதி ஏன் இதை கண்டுக்க மாட்டேன்றார்? என்று நிர்வாகிகள் தலை சொறிந்து வந்த நிலையில்...

விரைவில் கருணாநிதிக்காக தி.மு.க. எடுக்க திட்டமிட்டிருக்கும் பெரும் பாராட்டு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு வைக்கப்பட இருக்கும் அண்டை மாநில முதல்வர்களில் கேரள முதல்வர் பினராயி விஜயனும் ஒருவராம்.
ஆஹா இதுக்காகத்தான் பினராயியை போட்டு புரட்டியெடுக்க சுணங்கினாரோ தளபதி? என்று தாவாங்கட்டையை தடவியபடி தங்களுக்குள் முணுமுணுத்திருக்கிறார்கள் அதே நிர்வாகிகள்.
ஆனால் ‘அடேய் அப்ரசண்டிகளா! எதிர்ப்பும், நட்பும் அரசியல்ல மாறி மாறி வரும்யா. இந்த விழாவுக்காகதான் பினராயியை தளபதி எதிர்க்கலேன்னு சொல்றது லூசுத்தனமான சிந்தனை” என்று தளபதிக்கு வக்காலத்து வாங்கியிருக்கிறார் சீனியர் மோஸ்ட் நிர்வாகி ஒருவர்.
ஆனாலும் இவர்கள் இன்னும் அதே ஃபீலிங்கிலேயே இருக்கிறார்களாம்...!
