stalin vaiko meet the madurai airport

தமிழக அரசியலரங்கில் நேற்றிலிருந்து ஒரே ஆச்சரிய காற்று அடித்துக் கொண்டிருக்கிறது. அது இன்றும் தொடர்கிறது...

தினத்தந்தி பவள விழாவுக்கு வந்த பிரதமர் மோடி சர்ப்பரைஸ் விசிட்டாக கோபாலபுரம் சென்று கருணாநிதியை சந்தித்தார். ஏதோ பாகுபலியில் பல்வாள்தேவனே இறங்கி வந்து அமேந்திர பாகுபலிக்கு அரியணையை விட்டுக் கொடுத்த ரேஞ்சுக்கு அவ்வளவு ஆச்சரியமாகவும், பில்ட் அப் கொடுத்தும் இந்த விஷயம் பேசப்படுகிறது இந்தியாவில்.

மோடியே போயி கருணாநிதியை பார்த்துட்டாரா! அப்போ அப்படியிருக்குமோ, இப்படியிருக்குமோ! என்று ஆளாளுக்கு ஒரு விளக்க வியாக்யானம் படைத்துக் கொண்டிருக்கிறார்கள். 

‘நீங்க நினைக்கிற மாதிரியெல்லாம் இதுல ஒண்ணுமே கிடையாது. திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரை சந்திச்சு உடல் நிலை விசாரிக்க பிரதமர் வந்தார்’ என்று செயல் தல இதற்கு விளக்க உரை கொடுத்த பின்னும் விடுவேனா என்கிறார்கள் விமர்சகர்கள். 

இந்த பரபரப்பே அடங்காத சூழலில் இன்று அடுத்த ஆச்சரியம் தமிழகத்தை ‘அடடே!’ போட வைத்திருக்கிறது. அது மதுரை விமான நிலையத்தில் சற்று முன் வைகோவும், ஸ்டாலினும் சந்தித்துக் கொண்டதுதான். 

நாளை ‘பணமதிப்பிழப்பு விவகார’த்தை கண்டித்து மதுரையில் நடக்க இருக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து மதுரை வந்திருக்கிறார் ஸ்டாலின். அதே நேரத்தில் அதே விமான நிலையத்தில் புரட்சிப் புயல். 

ஒரு மந்தையிலிருந்து தனியே பிரிந்து சென்ற இரண்டு ஆடுகள் மீண்டும் ஒன்றை ஒன்று பார்த்துக் கொண்ட போது....கைகுலுக்கி அளவளாவிக் கொண்டன! யெஸ் பாஸ்! செயல்தலயும், புரட்சிப் புயலும் கைகுலுக்கி நட்பையும், அன்பையும் பரிமாறிக் கொண்டன. 

எதிரெதிர் துருவங்களாக முறைத்து நின்ற இருவரும் இப்படி பொதுவெளியில் அன்பை பரிமாறியது இரு திராவிட இயக்கங்களை சேர்ந்தவர்களையும் புன்னகைக்க வைத்திருக்கிறது. 

இதற்கு முன் பல முறை வைகோவும், ஸ்டாலினும் சில விமான நிலையங்களிலும், சில திருமண வைபவங்களிலும், சில துக்க நிகழ்வுகளிலும் சந்திக்கும் வாய்ப்பு வந்திருந்தது. ஆனால் அது நாசூக்காக இரண்டு தரப்பாலும் தவிர்க்கப்பட்டது. ஆனால் இன்று அப்படியில்லை. 

அதற்கு காரணமும் இருவருமே!
கடந்த சில மாதங்களுக்கு முன் கோபாலபுரம் சென்ற வைகோ உடல் நலிவுற்று இருந்த கருணாநிதியை சந்தித்து தழுதழுத்தார். ‘அண்ணே’ இன்று இவர் பாசமாக பற்ற, கருணாநிதிக்கும் விழியோரம் நீர் கசிந்தது. இதைப் பார்த்த ஸ்டாலினும், துரைமுருகனும் கலங்கிவிட்டனர்.

இந்த சந்திப்புக்கு ‘கடந்த ஒரு மாத காலமாக அண்ணன் கலைஞர் அவர்கள் என் கனவில் வந்தார். அதன் விளைவே இந்த சந்திப்பு.’ என்று செண்டிமெண்டல் விளக்கம் கொடுத்தார் வைகோ. 

அவர் காட்டிய அன்புக்கு பதில் மரியாதையாக, மழையால் ஒத்தி வைக்கப்பட்டு பின் நடத்தப்பட்ட முரசொலி பவளவிழா பொதுக்கூட்டத்திற்கு வைகோவை அழைத்து பிரதான சிறப்பு செய்தார் ஸ்டாலின். 

இவ்விரு நிகழ்வுகளின் மூலம் இரண்டு இயக்கங்களுக்கும் நடுவில் ஒரு சுமூக சூழல் உருவானது. இது தேர்தல் கூட்டணியாக உருமாறுமா என்று பேச்செழுந்த நிலையில் அப்படியே அமைதியானது இரு தரப்பும். 

இச்சூழலில் இன்று புயலும், தலயும் மறுபடியும் சந்தித்து அளவளாவி இருக்கிறார்கள். பரஸ்பரம் நலம் விசாரித்தனர். ஸ்டாலினிடம், ‘அப்பா எப்படியிருக்கார்? நல்லா தேறிட்டாரு.

எனக்கு உண்மையிலே பெரிய சந்தோஷம். நேத்து வீட்டு வாசலுக்கு வந்து தொண்டர்களை பார்த்து அவர் உற்சாகமா கையசைத்ததை பார்த்து மகிழ்ந்துட்டேன்.’ என்று உற்சாகமாக வைகோ உருக, ஸ்டாலின் நெகிழ்ந்து நன்றி சொல்லியிருக்கிறார். இருவர் கண்களிலும் நீர்த்துளிகள்.

இந்த பண்பும், நாகரிகமும் தமிழகத்தின் எல்லா கட்சி தலைவர்களுக்கு இடையிலும் தொடர வேண்டும். 

அரசியல்வாதிகள் நேர்மறையான குணங்களுடன் வாழ்ந்தால்தானே இந்த தமிழகமும் நேர்மறையாய் வளரும்!