- Home
- Tamil Nadu News
- Udhayanidhi vs CM Vijay: சனாதனத்தை மீண்டும் சீண்டிய உதயநிதி.. ஜோதிடருக்கு அரசு பதவி கொடுத்த விஜய்.. மோதல் ஆரம்பம்!
Udhayanidhi vs CM Vijay: சனாதனத்தை மீண்டும் சீண்டிய உதயநிதி.. ஜோதிடருக்கு அரசு பதவி கொடுத்த விஜய்.. மோதல் ஆரம்பம்!
Udhayanidhi vs CM Vijay: சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என உதயநிதி சட்டப்பேரவையில் பேசியுள்ளார். இது ஒருபக்கம் சர்ச்சையாக, மறுபக்கம் ஜோதிடருக்கு விஜய் அரசு பதவி கொடுத்ததும் சர்ச்சையாகியுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் பேசிய உதயநிதி
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தவெக சாதனை வெற்றி பெற்ற நிலையில், நடிகரும், அக்கட்சியின் தலைவருமான விஜய் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். எதிர்க்கட்சித் தலைவராக திமுகவின் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவராக முதன்முறையாக உரையாற்றிய உதயநிதி, ''தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும், வளர்ச்சிக்காகவும் நாம் எல்லாரும் சேர்ந்து ஒன்றாகப் பயணிப்போம். எது எப்படியானாலும் திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைப்படி எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பதை உறுதி செய்கின்ற வகையில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்து நாங்கள் நிச்சயம் செயல்படுவோம்'' என்றார்.

சனாதனத்தை சீண்டிய உதயநிதி
இறுதியில் தனது பேச்சை முடிக்கும்போது, ''வெல்க தமிழ், வாழ்க தமிழ்நாடு! மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்'' என்றார். சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என விஜய் சட்டப்பேரவையிலேயே பேசியுள்ளது பெரும் சர்ச்சையாகியுள்ளது. ஏற்கெனவே சென்னையில் 2023 செப்டம்பரில் நடைபெற்ற 'சனாதன ஒழிப்பு மாநாட்டில்' கலந்து கொண்ட உதயநிதி, ''சனாதனம் என்பது எதிர்க்கப்பட வேண்டியது அல்ல, அது முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டியது. டெங்கு, மலேரியா மற்றும் கொரோனா போன்ற நோய்களை நாம் எப்படி எதிர்க்காமல் ஒழிக்கிறோமோ, அதுபோலவே சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும்'' என்று பேசியது பெரும் சர்ச்சையானது. அப்போது அவர் துணை முதல்வராக இருந்ததால் கடும் கண்டனங்கள் குவிந்தன. உதயநிதிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகளும் உள்ளன.
உதயநிதிக்கு கண்டனம்
இந்த நிலையில், உதயதி மீண்டும் சனாதனத்தை சீண்டியுள்ளது அதுவும் சட்டப்பேரவையிலேயே பேசியுள்ளது எதிர்ப்புகளுக்கு வழிவகுத்துள்ளது. தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் ஆகியோர் ''உதயநிதி சனாதனத்தை ஒழிப்பதன் மூலம் இந்து மதத்தை அழிக்க வேண்டும் என கூறியிருக்கிறார்'' என கண்டனம் தெரிவித்துள்ளனர். உதயநிதி மீது முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜோதிடருக்கு அரசு பதவி கொடுத்த விஜய்
அதே வேளையில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவு கொடுக்கும் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இப்படியாக, சனாதனம் குறித்து உதயநிதி பேசிய நிலையில், விஜய்யின் தனிப்பட்ட ஆலோசகரும், ஜோதிடருமான ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் என்பவர் தமிழக முதல்வரின் (அரசியல்) சிறப்புப் பணி அதிகாரியாக (OSD) நியமிக்கப்பட்டுள்ளார். ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் தவெக தேர்தல் வெற்றியை துல்லியமாக கணித்தவர் என ஊடகங்களில் பேசப்பட்டது. நீண்ட நாட்களாக தன்னுடன் இருக்கும் அவருக்கு விஜய் அரசு பதவி வழங்கியுள்ளார்.
ஜோதிடருக்கு அரசு பதவி வழங்கிய முதல்வர் விஜய்க்கு இடதுசாரிகள், விசிகவை சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ''முதல்வர் விஜய்க்கு ஜோதிடத்தில் மீது நம்பிக்கை இருக்கலாம். அது அவரது தனிப்பட்ட உரிமை. ஆனால் அரசு பதவிகளில் அரசியலமைப்பு சட்டத்தை மீறி ஜோதிடரை எப்படி நியமிக்கலாம்'' என அவர்கள் விஜய்க்கு கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

