- Home
- Tamil Nadu News
- Tamilnadu Weather : 9 மாவட்டங்களில் வெளுத்துவாங்கப்போகும் கனமழை... சென்னைக்கு வானிலை ஆய்வு மையம் கொடுத்த அலர்ட்
Tamilnadu Weather : 9 மாவட்டங்களில் வெளுத்துவாங்கப்போகும் கனமழை... சென்னைக்கு வானிலை ஆய்வு மையம் கொடுத்த அலர்ட்
Tamil Nadu Weather Update : தமிழ்நாட்டில் இன்று சென்னை உள்பட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம்.

இன்றைய வானிலை நிலவரம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு இன்று (நவம்பர் 23) கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இடி, மின்னலுடன் பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தென்மேற்கு வங்கக்கடலில் இருந்து மத்திய மேற்கு வங்கக்கடல் வழியாக வடக்கு கடலோர ஆந்திரப் பிரதேசம் வரை சுமார் 1.5 கி.மீ. உயரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பாதை ஒன்று நிலவி வருகிறது. இதன் தாக்கத்தால் தமிழகத்தில் இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு பல்வேறு பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ள 9 மாவட்டங்கள்!
நவம்பர் 23-ம் தேதியான இன்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், தஞ்சாவூர், கடலூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், காஞ்சிபுரம், சேலம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், கள்ளக்குறிச்சி, கரூர், பெரம்பலூர், திருச்சி, அரியலூர், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்களில் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
நாளையும் 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
நாளை (நவம்பர் 24) கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். இந்தப் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசுவதுடன் இடி, மின்னலும் ஏற்பட வாய்ப்புள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், நீலகிரி, ராணிப்பேட்டை, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, கரூர், பெரம்பலூர், திருச்சி, அரியலூர், மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பல இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் இன்று வானிலை எப்படி இருக்கும்?
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 33 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 முதல் 25 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.















