குற்றம் சொல்வது திமுகவின் வேலை, நாட்டைக் காப்பாற்றுவது தமிழக முதல்வரின் வேலை என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.
 
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி உள்ளிட்ட பகுதிகளில் அறநிலையத்துறை கீழ் செயல்படும் கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு 20 கிலோ அரிசியை நிவாரணமாக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’பேரிடர் காலத்திலும் கூட தமிழகத்தில் உணவில்லை என்ற நிலை இருக்க கூடாது என்ற நோக்கில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகள் இயங்க தமிழக அரசு எந்தவித தடையும் விதிக்கவில்லை. தடையை நீக்கி சிறு, குறு தொழில்கள் தொடங்கலாம் என உத்தரவ தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

பட்டாசு ஆலைகள் செயல்பட ஆரம்பித்தால் சமூக ஊடுருவல் ஏற்பட்டு சமூக விலகல் இல்லாமல் போகும் அதன் காரணமாக பட்டாசு ஆலைகள் மே 3 வரை மக்கள் நலன் கருதி உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளன. ஒரு சில பட்டாசு ஆலைகள் மூலப்பொருட்கள் கிடைக்காத காரணங்களால் இயங்கவில்லை. இருப்பினும் பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அந்தந்த ஆலை உரிமையாளர்கள் நிவாரணங்களை வழங்கி வருகிறார்கள்.

குற்றம் சொல்வது திமுகவின் வேலை, நாட்டைக் காப்பாற்றுவது தமிழக முதல்வரின் வேலை. இதை நாட்டு மக்கள் அறிவார்கள். அமெரிக்க அதிபர் ட்ரம்பே புலம்பும் இந்த நேரத்தில் இந்திய பிரதமரும், தமிழக முதல்வரும் எடுத்த நடவடிக்கைகள் காரணமாகவே தமிழக மக்கள் தனிமையில் இருக்கிறார்கள், விழித்து இருக்கிறார்கள், விலகி இருக்கிறார்கள், அதே சமயம் நிம்மதியாக இருக்கிறார்கள். தமிழக மக்கள் பிரதமர் மோடியும் தமிழக முதல்வரும் தங்களைக் காப்பாற்றுவார்கள் என நம்பிக்கையுடன் உள்ளார்கள்’’என அவர் தெரிவித்தார்.