விவசாயிகள் மரணம் தொடர்பாக அதிமுக அமைச்சர்கள் இதயத்தில் ஈரமின்றி பேசுவதாக தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகம் காணாத வறட்சியின் கொடுமையால் கடந்த ஒரு மாதத்துக்குள் 125 விவசாயிகள் தற்கொலையாலும், அதிர்ச்சியாலும் உயிரிழந்தது குறித்து நடவடிக்கை எடுக்க தாம் முதலமைச்சரை நேரில் சென்று வலியுறுத்தியதாக சுட்டிக்காட்டியுள்ளார். அதுவரை தூங்கி வழிந்த அரசு பின்னர் அமைத்த ஆய்வுக்குழுவாவது பலனைத் தரும் என எதிர்பார்த்த நிலையில், அதிமுக அமைச்சர்களின் பேச்சு அந்த எண்ணத்தை தவிடு பொடியாக்கி விட்டதாகக் அவர் கூறியுள்ளார். தமிழகத்தில் விவசாயிகள் யாரும் வறட்சியால் உயிர் இழக்கவில்லை என அதிமுக அமைச்சர்கள் கூறியிருப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிந்ததையும், 4 வாரத்தில் விவசாயிகள் மரணம் குறித்து பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதையும் சுட்டிக் காட்டிய ஸ்டாலின் வழக்கு நிலுவையில் இருக்கையில், விவசாயிகள் மரணம் தொடர்பாக அதிமுக அமைச்சர்கள் கூறி வரும் கருத்து நீதிமன்ற அவமதிப்பு செயல் என்றார்.விவசாயிகளின் மரணத்தை வயது முதிர்வு, உடல் உபாதை, சொந்தப் பிரச்சனை, கள்ளக்காதல் எனக் கூறி இழிவுபடுத்தி அவர்களின் கடும் கோபத்துக்கு அதிமுக அமைச்சர்கள் ஆளாகி வருவதாகக் கூறியுள்ளார். ஜெயலலிதாவின் மரணச் செய்தியால் அதிர்ச்சியில் இறந்தார்கள் என 400க்கும் மேற்பட்டவர்களைப் பட்டியலிட்டுள்ளதாகக் கூறிய ஸ்டாலின், அவர்களில் முதியவர்களும், நோய்வாய்ப்பட்டவர்களும் இல்லையா என கேள்வி எழுப்பினார். 

இதயத்தில் ஈரம் சிறிதுமின்றி அ.தி.மு.க அமைச்சர்கள் உதிர்க்கும் வார்த்தைகளைக் கட்டுப்படுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு இருப்பதாகக் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் தொிவித்துள்ளாா்.