Asianet News TamilAsianet News Tamil

ஊழல் சரித்திரத்தின் சந்தி சிரிக்குது... உறவினர்களுக்கும், பினாமிகளுக்கும் டெண்டரா? ஏகபோகமாக கொடி கட்டிப் பறக்குது! ஸ்டாலின் ரணகளம்

stalin statements against Palanisamy relation house raid
stalin statements against Palanisamy relation house raid
Author
First Published Jul 16, 2018, 5:16 PM IST


அ.தி.மு.க ஆட்சியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நெடுஞ்சாலைத்துறையின் நீண்ட நெடிய ஊழல் சரித்திரத்தின் சந்தி சிரிக்கும் சான்றுகளாகவும், ஆதாரங்களாகவும் அமைந்திருக்கின்றன என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்அவர் கூறியுள்ளதாவது; அ.தி.மு.க வின் மாண்புமிகு முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமியின் பினாமியாக உள்ள நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் செய்யாதுரை மற்றும் நாகராஜன் வீடுகள் மற்றும் அருப்புக்கோட்டையில் உள்ள அவரது “எஸ்.பி.கே” கட்டுமான நிறுவன அலுவலகங்களில் வருமான வரித்துறை "ரெய்டு" நடைபெற்றுக் கொண்டிருப்பதை, பொது நலன் கருதி வரவேற்கிறேன்.

“எஸ்.பி.கே” என்ற பெயரில் பல்வேறு நிறுவனங்களையும், சில துணை நிறுவனங்களையும் உருவாக்கி அவற்றில் முதலமைச்சரின் சம்பந்தியும், இந்த ஒப்பந்ததாரர் செய்யாதுரை மற்றும் நாகராஜன் பங்குதாரர்களாக இருந்து கொண்டு, பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தங்களைத் தட்டிப்பறித்து, அ.தி.மு.க ஆட்சியில் இருவரும் ஏகபோகமாக கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கிறார்கள்.

stalin statements against Palanisamy relation house raid

முதலில் துணை முதலமைச்சருக்கும், தற்போது முதலமைச்சருக்கும் பினாமியாகச் செயல்பட்டு வரும் செய்யாதுரை, முதலமைச்சரின் சம்பந்தி திரு சுப்ரமணியமும் பங்குதாரர்களாக இருக்கும் நிறுவனங்களுக்கு மட்டுமே நெடுஞ்சாலைத் துறை கான்டிராக்டுகள் என்பது திரு எடப்பாடி பழனிசாமி அரசின் எழுதப்படாத கருப்பு விதி.

சமீபத்தில் 407 கோடி ரூபாய் மதிப்புள்ள செங்கோட்டை - கொல்லம் சாலை ஒப்பந்தப் பணி, 200 கோடி ரூபாய் மதிப்புள்ள மதுரை சுற்று வட்டாரச் சாலை ஒப்பந்தப் பணி, வண்டலூர் முதல் வாலாஜா ரோடு வரை 200 கோடி ரூபாய் மதிப்பில் நான்கு வழிச்சாலையை ஆறு வழிச்சாலையாக அமைக்கும் ஒப்பந்தப் பணி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, பொள்ளாச்சி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் நெடுஞ்சாலைத்துறையின் 2000 கோடி மதிப்புள்ள பராமரிப்பு ஒப்பந்தப் பணிகள் என அரசாங்க ஒப்பந்தங்கள் அனைத்தும் “சுப்பிரமணியம்- செய்யாதுரை, நாகராஜன்” என்ற இரட்டையர் பங்கு பெற்றிருக்கும் நிறுவனங்களுக்கே வாரிவாரி வழங்கப்படுகின்றன. இந்த மாபெரும் மோசடி குறித்து உரிய ஆதாரங்களுடன் ஏற்கனவே திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், மாநில லஞ்ச ஒழிப்புத்துறைக்குப் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இந்நிலையில் தற்போது நடைபெறும் வருமான வரித்துறை சோதனையில் 80 கோடி ரூபாய்க்கும் மேல் ரொக்கமாகவே கைப்பற்றப்பட்டுள்ளது என்பது அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. 30-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் சோதனையில் இருக்கின்றன என்பதும், இந்த செய்யாதுரை மற்றும் நாகராஜன் அலுவலகங்கள் அனைத்தும் ரெய்டுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளன என்பதும் அ.தி.மு.க ஆட்சியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நெடுஞ்சாலைத்துறையின் நீண்ட நெடிய ஊழல் சரித்திரத்தின் சந்தி சிரிக்கும் சான்றுகளாகவும், ஆதாரங்களாகவும் அமைந்திருக்கின்றன.

stalin statements against Palanisamy relation house raid

முதலமைச்சரின் உறவினர்களும், பினாமிகளும் அடங்கிய நிறுவனங்களுக்கு மட்டுமே நெடுஞ்சாலைத்துறையில் உள்ள ஒப்பந்தப் பணிகள் அனைத்தும் வழங்கப்படுவதும், "சிங்கிள் டெண்டர்" முறையில் கூட வேலைகள் எதேச்சையாக ஒதுக்கப்படுவதும் ஊரெல்லாம் நாற்றமெடுக்கும் நெடுஞ்சாலைத்துறைச் சாக்கடை ரகசியங்கள்.

2800 கோடி ரூபாய்க்கு இந்த செய்யாதுரை மற்றும் சுப்பிரமணியன் பங்குதாரர்களாக உள்ள நிறுவனங்களுக்கு “கான்டிராக்டுகளை” வழங்கியதால் தான், முறைகேடுகளை முழுமையாகக் கண்டுபிடித்துத் தண்டிக்கும் வலிமைமிக்க "லோக் அயுக்தா" அமைப்பதற்கு முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி அஞ்சி நடுங்கியிருக்கிறார் என்பது இப்போது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது.

நெடுஞ்சாலைத்துறையில் கான்டிராக்டுகளையும் வழங்கி விட்டு, அதுபற்றி விசாரணை நடத்தினால் தானும் தன் குடும்பமும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்படும் பேரபாயமும் பெருத்த அவமானமும் ஏற்படும் என்பதால் தான், “கான்டிராக்டுகளை” விசாரிக்கக் கூடாது என்றே ஒரு சிறப்புப் பிரிவை லோக் அயுக்தா சட்டத்தில் சதி எண்ணத்தோடு புகுத்தி, சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் சுட்டிக்காட்டியதையும் மதிக்காமல் அவசர அவசரமாக அள்ளித் தெளித்த கோலத்தில், “லோக் அயுக்தா சட்டத்தை” நிறைவேற்றியிருக்கிறார் முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி.

ஆகவே உறவினர்களுக்கும், பினாமிகளுக்கும் ஒப்பந்தப் பணிகளை கொடுத்து, அந்தப் பகல் கொள்ளையை லோக் அயுக்தா அமைப்பு விசாரிக்க முடியாதபடி சட்டத்திற்கும் விலங்கு மாட்டியிருக்கும் திரு.எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் பதவியில் தொடர்ந்து நீடிப்பதற்கான தார்மீக உரிமையை இழந்து விட்டார்.

முறையான வருமான வரித்துறை சோதனைகளுக்கும் விசாரணைக்கும் வழிவிடும் வகையிலும், ஏற்கனவே திராவிட முன்னேற்றக் கழகம் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் கொடுத்திருக்கும் ஊழல் புகார்களை சுதந்திரமாக விசாரிப்பதற்கு ஏற்ற முறையிலும், முதலமைச்சர் பதவியிலிருந்து உடனடியாக திரு பழனிசாமி அவர்கள் விலகிவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் கரூர் அன்புநாதன், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், முன்னாள் மேயர் சைதை துரைசாமி, துணை முதல்வர் திரு ஓ. பன்னீர்செல்வத்தின் மகன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன்ராவ், திரு ஓ. பன்னீர் செல்வத்தின் மணல் கூட்டாளி சேகர் ரெட்டி, கொடநாடு மற்றும் போயஸ் இல்லத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனைகளையும், தற்போது முதலமைச்சரின் பினாமிகள் மீதான வருமான வரித்துறை சோதனையையும் சட்டப்படி நியாயமான முறையில் தீவிரப்படுத்த வேண்டும் என்றும், குற்றவாளிகளைக் கூண்டில் ஏற்றி, கோடி கோடியாய்க் கொள்ளையடித்த பணத்தை அரசின் கஜானாவில் சேர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். என இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios