குட்கா வழக்கில் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் சுகாதாரத்துறை அமைச்சர் திரு விஜயபாஸ்கர் மற்றும் தமிழ்நாடு காவல்துறை தலைவர் திரு டி.கே. ராஜேந்திரன் ஆகியோர் வீடுகளில், ஊழல் வழக்கின் அடிப்படையில் சி.பி.ஐ சோதனை நடத்திய பிறகும், இருவரையும் தமிழக அரசு டிஸ்மிஸ் செய்யாமல் இருப்பதும், அதை மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது.

கான்ஸ்டபிள் ஒருவர் மீது புகார் வந்தாலே “சஸ்பென்ட்” செய்யும் நிலையில், காவல்துறைத் தலைவர் மீதே ஊழல் குற்றச்சாட்டு வந்த பிறகும் அரசும், மாண்புமிகு ஆளுநர் அவர்களும் அமைதி காப்பது அரசியல் சட்டத்தின் படி செயல்பட வேண்டிய அரசுக்கு ஒரு போதும் ஏற்ற செயலாக இருக்க முடியாது. உச்சநீதிமன்றத்தாலும், தமிழக அரசாலும் தடை செய்யப்பட்ட குட்காவை தாராளமாக விற்பதற்கும், வருமான வரித்துறைக்கு 250 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுத்துவதற்கும், லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சித் தகவல், 09.07.2016 அன்று வருமான வரித்துறை புலனாய்வு இணை இயக்குனர் கண்ணன் நாராயணன் முன்பு, குட்கா மாமூல் கொடுத்த மாதவராவின் வாக்குமூலத்தின் மூலமாகவே வெளிவந்திருக்கிறது.

“குட்கா டைரியின்” அடிப்படையில் ஆதாரத்துடன் சொல்ல வேண்டுமென்றால் 21.04.2016, 20.05.2016, 20.06.2016 ஆகிய மூன்று தேதிகளில் 60 லட்சம் ரூபாய் லஞ்சம், அன்றைக்கு சென்னை மாநகர காவல்துறை ஆணையராக இருந்தவருக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மாதவராவ் வைத்துள்ள “பொது செலவுகள்” பற்றிய கணக்குப் புத்தகத்தில் உள்ளது.

அதில் “CP” என்று குறிப்பிடப்பட்ட, அதற்கு “கமிஷனர் ஆப் போலீஸ்” என்று அர்த்தம் என வருமான வரித்துறை புலனாய்வு துணை இயக்குநரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார் மாதவராவ். மேற்கண்ட தேதிகளில் சென்னை மாநகரக் காவல் ஆணையராக இருந்தவர் திரு டி.கே. ராஜேந்திரன் தான்.

இதே போல் “HM” என்ற பெயரில் 56 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டு, அந்த “HM” என்பதற்கு “ஹெல்த் மினிஸ்டர்” என்று அர்த்தம் என்றும் மாதவராவ் வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் வைத்துள்ள கணக்குப் புத்தகத்தின் பக்கம் 87-ல் உள்ள இந்த விவரங்களின் அடிப்படையில் 01.04.2016 முதல் 15.06.2016-க்குள் மேற்கண்ட 56 லட்சம் ரூபாய் லஞ்சம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் - தற்போதும் நீடிப்பவர் அமைச்சர் திரு விஜயபாஸ்கர்! இந்த இருவரைத் தவிர பல்வேறு மத்திய அரசு அதிகாரிகளும், சென்னை மாநகரத்தில் உள்ள காவல் உதவி ஆணையர்களும் லஞ்சம் பெற்றிருக்கிறார்கள்.

சென்னை மாநகரத்தில் காவல்துறை இணை போலீஸ் ஆணையராக இருந்த ஒருவருக்கும் 04.11.2015, 10.12.2015 மற்றும் 02.01.2016 ஆகிய தேதிகளில் 20 லட்சம் லஞ்சம் கொடுத்துள்ளதாக மாதவராவ் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

வருமான வரித்துறையின் புலனாய்வுத்துறை அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்டுள்ள வாக்கு மூலத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரும் சி.பி.ஐ முதலில் 05.09.2018 அன்று, டி.ஜி.பி. திரு டி.கே. ராஜேந்திரன், அமைச்சர் திரு விஜயபாஸ்கர் உள்ளிட்ட லஞ்சம் பெற்ற அதிகாரிகளின் வீடுகளில் சோதனை நடத்தியது.

ஆரம்ப கட்ட ஆதாரம் இருக்கிறது என்ற அடிப்படையில் மட்டுமே சோதனை நடத்துவதற்கான ஆணையை நீதிமன்றத்தில் சி.பி.ஐ பெற்றிருக்க முடியும். அந்த சோதனை நடைபெற்ற நாளில் அமைச்சரும், டி.ஜி.பி.யும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு சோதனை நடைபெற்று முடிந்திருக்கிறது. டி.ஜி.பி. என்ற தலைவர் இல்லாமல் ஒரு நாள் தமிழ்நாடு காவல்துறை இயங்கிய வரலாற்று அசிங்கம் அரங்கேறியிருக்கிறது.

இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சருக்கும், டி.ஜி.பி.க்கும் லஞ்சம் கொடுத்த மாதவராவையும், அந்த லஞ்சத்தைக் கொண்டு போய் கொடுத்த ராஜேந்திரன் உள்ளிட்ட இடைத் தரகர்களையும், மத்திய அரசு அதிகாரிகளையும் கைது செய்து அவர்கள் எல்லாம் 15 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டு விட்டார்கள். ஆனால், லஞ்சம் பெற்ற அமைச்சர் திரு விஜயபாஸ்கரையும், டி.ஜி.பி. திரு டி.கே. ராஜேந்திரனையும் கைது செய்யாத மர்மம் என்ன என்பது இன்னும் விளங்கவில்லை.

ஊழல் வழக்கில் லஞ்சம் பெற்றவர்களை முதலில் கைது செய்வதுதான் வழக்கம். ஆனால், “குட்கா ஊழல்” வழக்கில் லஞ்சம் பெற்றவர்களை பதவியில் நீடிக்க அனுமதித்து விட்டு, லஞ்சம் கொடுத்திருப்பவர்களையும், அந்த லஞ்சப் பணத்தை கொண்டு போய் கொடுத்த இடைத்தரகரையும் முதலில் கைது செய்திருக்கிறது சி.பி.ஐ. “குட்கா டைரி”, “குட்கா மாதவராவின் வாக்கு மூலம்” மற்றும் “சோதனை” அடிப்படையில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் “லஞ்சம் கொடுத்தவர் கைது” “லஞ்சப் பணத்தை கொண்டு போய் சேர்த்த இடைத்தரகர் கைது” “ஊழல் பணத்தைப் பெற்ற மத்திய அரசு அதிகாரிகள் கைது” என்று தீவிர நடவடிக்கை எடுத்து வரும் சி.பி.ஐ. மாநில அமைச்சரிடமும், மாநிலத்தில் உள்ள டி.ஜி.பி.யிடமும் நெருங்கி விடாமல் தயங்கி நிற்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

ஆகவே, ஆவணங்கள் மற்றும் வாக்கு மூலங்களின் அடிப்படையில் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரங்கள் பேரணி வகுத்து நிற்கும் நிலையில், அமைச்சர் திரு விஜயபாஸ்கரையும், டி.ஜி.பி. திரு டி.கே. ராஜேந்திரனையும் உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களை மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.

அதுமட்டுமின்றி சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டும் வகையில் அமைச்சரையும், டி.ஜி.பி.யையும் குட்கா வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ உடனடியாக கைது செய்து, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை நிலைநாட்டிட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு அதில் கூறியுள்ளார்.