நேற்றிரவு தேனி மக்களவைத் தொகுதிக்கு திடீரென 50 வாக்குப் பதிவு எந்திரங்கள் கொண்டுவரப்பட்டது. இதனையறிந்த திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் தேனி தாலுகா அலுவலகத்தை  முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தேனி தொகுதியில் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் மகனை ஜெயிக்க வைப்பதற்காக வாக்குப் பதிவு எந்திரங்களை மாற்ற முயற்சி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் , தேனிக்கு மாற்றப்பட்ட 50 வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் ஈரோட்டுக்கு அனுப்பப்பட்ட 20 ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களையும் உடனடியாக திரும்பப் பெற தலைமை தேர்தல் ஆணையர் உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.. 

ஆள்நடமாட்டம் இல்லாத நேரத்தில் வாக்கு இயந்திரங்கள் கொண்டு  செல்லப்பட்டது கண்டனத்திற்குரியது. அதிகாரிகளின் செயல்பாடு ஆளும்கட்சிக்கு ஆதரவாகவும், ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாகவும் உள்ளது. தேர்தல் ஆணையம் சம்பந்தமே இல்லாததைப்போல் கைக்கட்டி வேடிக்கை பார்ப்பது கவலை அளிக்கிறது.

46 வாக்குச்சாவடிகளில் தவறு என்ன என்பது பற்றிய விவரங்கள் அனைத்தையும் வெளியிட வேண்டும் என்றும், மறுவாக்குப்பதிவு பரிந்துரைத்த விவரங்கள்  அனைத்தையும் வெளியிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிடாத நிலையில் ரகசியமாக வாக்கு இயந்திரங்களை கொண்டு சென்றது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள ஸ்டாலின், தேர்தல் அதிகாரிகள் ஏதோ சில வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் போல நடந்து கொள்கிறார்கள் என குற்றம்சாட்டியுள்ளார்.

வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பதில் தமிழகத்தில் தொடர்ந்து முறைகேடுகள் நிகழ்கின்றன. மாநில சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரியை நியமித்து, வாக்குப்பதிவு இயந்திரங்களையும் வாக்குப்பதிவு மையங்களையும் முழுமையான அளவிற்கு பாதுகாத்திட வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.. 

தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹு மீதுள்ள நம்பிக்கையை திமுகவும், எதிர்க்கட்சிகளும் முற்றிலும் இழந்து விட்டன. வாக்குப்பதிவு இயந்திரங்களையும், மையங்களையும் முழுமையாக பாதுகாக்க, சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..