அண்டை மாநிலங்கள் கூட தங்கள் மாநில விவசயிகளை பாதுகாக்க மத்திய அரசிடம் போராடி நிதி பெறும்போது அதிமுக அரசு இன்னும் கும்பகர்ண தூக்கத்தில் உள்ளது என்று ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

, அண்டை மாநிலமான கர்நாடகத்தில் கடுமையான வறட்சியின் பிடியில் விவசாயிகள் தவிப்பதாகவும், அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 176 தாலுகாக்களில், 139 தாலுகாக்களில் கடும் வறட்சியின் காரணமாக ரூ.12000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும், ஒரு அறிக்கையை தாக்கல் செய்து, ரூ.4702 கோடி வறட்சி நிவாரணம் அளிக்க வேண்டும் என மத்திய அரசிடம், அம்மாநில முதல்வர் சித்தராமையா கோரிக்கையே வைத்து விட்டார்.

 மத்திய அரசின் ஆய்வுக்குழு நேரில் பார்வையிட்டு அறிக்கை அளித்த நிலையில், கடந்த வாரம் டெல்லியில் பிரதமரை நேரில் சந்தித்த கர்நாடக முதல்வர், வறட்சி நிவாரண நிதி வழங்கக்கோரி வலியுறுத்தினார். 

முதலில் 1000 கோடி ரூபாய் அளவில் நிவாரணம் தருவதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அவர்களுடனான பேச்சுவார்த்தையில் தெவிக்கப்பட்டாலும், கூடுதல் நிவாரணம் தேவை என்பதை, கர்நாடக அரசுத்தரப்பில் கடுமையாக வலியுறுத்தி வந்தனர். இந்தநிலையில், இன்று மத்திய அரசு கர்நாடகத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.1788.44 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.

இதுபோலவே, பருவமழை பொய்த்ததால் பாதிப்புக்குள்ளான கேரளாவும் வறட்சி மாநிலமாக அறிவிக்கக் கோரி, ஆய்வுகளை மேற்கொண்டு, மத்திய அரசிடம் நிதியினைக் கேட்டுள்ளது. அண்டை மாநிலங்கள் எல்லாம் அசுர வேகத்தில் தங்களின் மாநில விவசாயிகளுக்காக பாடுபட்டு மத்திய அரசிடம் உதவிகளை கோரிப்பெறுகின்ற நிலையில், அதிமுக அரசு மட்டும் ஆமை வேகத்தில் செயல்பட்டு, விவசாயிகள் நலன் பற்றி அக்கறை காட்டாமல் இருக்கிறது. 

அண்டை மாநிலங்களை விட மிகவும் அதிகமான, கடுமையான வறட்சியை தமிழகம் சந்தித்து வருகிறது. பாசனத்துக்குத் தேவையான தண்ணீர் பிரச்சினை மட்டுமின்றி, மாநிலம் முழுவதும் குடிநீர் பஞ்சமும் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. சென்னை மாநகரத்தில் ஒரு மாதத்திற்கு கூட குடிநீர் இருப்பு இல்லை என்று அதிர்ச்சி செய்திகள் வெளி வருகின்றன. ஆனால், தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க. அரசு கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து விழித்துக் கொள்ள மறுக்கிறது.

தமிழக அரசு இப்போது தாமதமாக அமைத்துள்ள ஆய்வுக்குழுவின் அறிக்கைக்குப் பிறகு, மத்திய குழு வருகை தரவேண்டும். அதன்பிறகு, மத்திய அரசிடமிருந்து உரிய வறட்சி நிவாரணம் பெற வேண்டும். இதற்குள் இன்னும் எத்தனை விவசாயிகளின் உயிர்களை பலி கொடுக்க வேண்டியிருக்குமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. 

ஆனால் அதிமுகவிலோ இருக்கின்ற முதல்வரை மாற்ற, அவருக்கு நெருக்கடி கொடுக்க எப்படி பேட்டி கொடுக்கலாம் ? என்ன மாதிரி அறிக்கை கொடுக்கலாம் ? என்பதில் அதீத அக்கறை காட்டி விவசாயிகள் நலனைப் புறக்கணித்து விட்டார்கள். 

நான் தயவுகூர்ந்து அதிமுக அரசை கேட்டு கொள்வது எல்லாம், தமிழகத்தில் இனி ஒரு விவசாயி கூட வறட்சியின் காரணமாக உயிரிழக்கக் கூடாது என்பது தான். ஆகவே, ஆளும் அ.தி.மு.க அரசு விரைந்து செயல்பட்டு, தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, உரிய வறட்சி நிதியை உடனடியாக பெற வேண்டும்.

 உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையும், கருகும் பயிரால் வாடி வேதனையில் தவிக்கும் விவசாயிகளுக்கு இழப்பீடும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.