வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் வரும் 5ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க சார்பில் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து அணைக்கட்டு பகுதியில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்த வேனில் பிரசாரம் செய்தார்.

அப்போது பேசிய அவர்,  ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக தி.மு.க பாடுபடும். தி.மு.க.,வின் வெற்றியைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு சதி செய்து வேலூர் தேர்தலை ரத்து செய்தன. தி.மு.க. மீது அபாண்டமான குற்றச்சாட்டை அ.தி.மு.க சுமத்தியது.

மத்தியில் உள்ள ஆட்சியும், மாநிலத்தில் உள்ள ஆட்சியும் மக்களைப் பத்தி கவலைப்படுவதாக இல்லை. பா.ஜ.க.,வை தமிழகம் புறக்கணிப்பதால் தமிழ்மொழியை அழிக்க பா.ஜ.க அரசு திட்டமிட்டு வருகிறது. தி.மு.க எம்.பி.,க்கள் நாடாளுமன்றத்தில் மக்கள் பிரச்சனைக்காகக் குரல் கொடுத்து வருகின்றனர்.

அ.தி.மு.க ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் முடங்கிப்போய் உள்ளது. உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாததால் அ.தி.மு.க ஆட்சியில் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளன. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க பல துண்டுகளாக உடைந்துள்ளது.


  
எட்டு ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் அ.தி.மு.க எந்த திட்டங்களையும் நிறைவேற்றவில்லை. பல்வேறு திட்டத்திற்கான அரசின் நிதி முறையாகப் பயன்படுத்தவில்லை என சி.ஏ.ஜி அறிக்கை வெளியிட்டுள்ளது என ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்த ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள அமைச்சர்களுக்கு  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாதா மாதம் படி அளக்கிறார் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  குற்றம்சாட்டினார்.