மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின் பொதுக் கூட்டங்களில் பேசி வருகிறார். இன்று மாலை தென் சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியனை ஆதரித்து கண்ணகி நகரில் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். 
அவர் பேசும் போது அறிஞர் அண்ணா, முரசொலி மாறன் போன்றோர் போட்டியிட்ட தென் சென்னை மக்களவை தொகுதியில் போட்டியிடுவது, தமிழச்சி தங்கபாண்டியனுக்கு பெருமையான விஷயம் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்த கூட்டத்தில் திமுகவின் சாதனைகளை ஸ்டாலின் பட்டியலிட்டு பேசினார். இதே தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில் நின்று வென்று அண்ணா எம்பியாக டெல்லியில் குரல் கொடுத்தார்.
 
கலைஞரின் மனசாட்சியான முரசொலி மாறன், இதே தென் சென்னையில் நின்று தான் எம்பியாக மாறினார். அப்படிப்பட்ட தொகுதியில் போட்டியிடும் பெருமை தமிழச்சி தங்க பாண்டியனுக்கு கிடைத்துள்ளது.

தென்சென்னை திமுகவின் கோட்டையாக விளங்குகிறது. இங்கு நிற்கும் தமிழச்சி தங்க பாண்டியனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் என தெரிவித்தார். 

தமிழகத்தில் சமச்சீர் கல்வியை கொண்டுவர உதவியாக இருந்தவர் தமிழச்சி தங்க பாண்டியனின் சகோதரர் தங்கம் தென்னரசு என்றும் கூறினார். தமிழகத்தில் நான் செல்லும் இடங்களில் எல்லாம் கூடிய கூட்டத்தை பார்த்து பெருமைப்படுகிறேன். இங்கு கூடியிருக்கும் மக்கள் வெள்ளத்தை பார்த்து சொல்கிறேன், அகங்காரத்தோடு சொல்றேன், 40க்கு 40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றார்.

ஏபரல் 18ம் தேதி நடைபெற உள்ள தேர்தல் தமிழகத்திலும், மத்தியிலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் தேர்தல். மக்கள் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்றும் ஸ்டாலின் கூறினார்.