Asianet News TamilAsianet News Tamil

என்ன பேச்சு? அப்பப்பா... உசுப்பேத்திவிட்ட ஸ்டாலின்... மெய் சிலிர்த்து மெர்சலாகிப் போன ராகுல்!!

தலைவர் கலைஞர் அவர்களின் மகனாக தமிழ்நாட்டில் இருந்து அழைக்கிறேன்; ராகுல்காந்தியே வருக! நாட்டுக்கு நல்லாட்சி தருக! என உரை நிகழ்த்தினார் மு.க.ஸ்டாலின்.

Stalin Speech in Karunanidhi Statue Function
Author
Chennai, First Published Dec 16, 2018, 10:34 PM IST

கலைஞரின் உயிரினும் உயிரான அன்பு உடன்பிறப்புகளே உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கம்.

இன்று அறிவாலயத்திலே தலைவர் கலைஞர் திருவுருவச் சிலையினை திறந்து வைத்து விட்டு அவருடைய நினைவிடத்திற்கு நேரடியாகச் சென்று தன்னுடைய மரியாதையை செய்து அதைத் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய இந்த மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்திருக்கும் தலைவர்களை எல்லாம் தொடக்கத்தில் எங்களுடைய பொருளாளர் வரவேற்று மகிழ்ந்து இருந்தாலும், திமுக தலைவர் என்கிற முறையில் நானும் அதை வழிமொழிகிற நிலையில் உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன்.

அண்ணா அறிவாலயத்தில் கலைஞர்  சிலையை அன்னை சோனியா காந்தி அவர்கள் திறந்து வைத்த போது, எனது நினைவிற்கு வந்தது, 1961ல் சென்னை மாநகராட்சியை திமுக வென்ற நேரத்தில் திமுக சார்பில் சென்னை ஜிம்கானா கிளப் முன்பு பெருந்தலைவர் காமராசர் சிலையை பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு  திறந்து வைத்தார்.

2018ல் இன்று அதே நேரு குடும்பத்தைச் சார்ந்த அன்னை சோனியா அவர்கள் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களின் சிலையை திறந்து வைத்திருப்பது ஒரு வரலாறு. நான் இன்று மிகுந்த மகிழ்ச்சியில் பூரித்து திளைத்துக் கொண்டிருக்கிறேன். காரணம், தமிழர்களின் வாழ்விலும், வளர்ச்சியிலும் இது ஒரு முக்கியமான நாள். ஏன், எனது வாழ்விலும் மறக்க முடியாத நாள்.

நீதிக்கட்சி தோற்றுவிக்கப்பட்ட தினம்;

தந்தை பெரியார் பிறந்த நாள்;

பேரறிஞர் அண்ணாவினுடைய பிறந்த நாள்;

திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய தினம்;

நம்முடைய தலைவர் கலைஞர் பிறந்த நாள்;

அண்ணா அறிவாலயம் திறக்கப்பட்ட நாள்;

புகழ்மிக்க இந்த வரிசையில் தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலை திறக்கப்பட்ட இந்த நாளும் இணைந்திருப்பதை எண்ணிப் பார்த்து மகிழ்ச்சியடைகிறேன்…

இது திமுக அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான நாள் மட்டுமல்ல, எனது வாழ்விலும் முக்கியமான நாள் என்று நான் ஏன் சொல்கிறேன் என்றால், பெரியாரின் கனவை நிறைவேற்றி இருக்கிறோம்!

1968 ஆம் ஆண்டு கலைஞருக்குச் சிலை வைக்க வேண்டும் என்று முதலில் சொன்னவர் பெரியார் அவர்கள் தான்.

Stalin Speech in Karunanidhi Statue Function

சிலையைத் திறந்து வைக்க அன்றைய முதலமைச்சர் அண்ணா அவர்களும் ஒப்புக் கொண்டார். ஆனால் தனக்கு சிலை அமைக்க வேண்டாம் என்று கலைஞர் திட்டவட்டமாக மறுத்து விட்டார்.

அதற்குப்பிறகு கலைஞருக்கு சிலை வைத்தே ஆகவேண்டும் என்று “விடுதலை” நாளிதழில் 1968ம் ஆண்டு பெரியார் அவர்களே தலையங்கம் எழுதினார். “சிலை அமைக்கும் பொறுப்பை நானே ஏற்கிறேன்” என்றும் பெரியார் அவர்கள் சொன்னார்கள். அண்ணா அவர்களின் உடல்நலக்குறைவு, மறைவு ஆகியவற்றால் அந்தப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது.

1971ம் ஆண்டு பெரியார்  கலைஞருக்கான சிலை அமைக்கும் பணியை மீண்டும் தொடங்கினார். சிலை அமைக்கும் குழுவின் புரவலராக பெரியார் இருந்தார். தலைவராக தவத்திரு குன்றக்குடி அடிகளார் இருந்தார். துணைத் தலைவராக இன்றைய திக தலைவர் வீரமணி.

பெரியாரின் மறைவுக்குப் பிறகு, அன்னை மணியம்மையார் முயற்சியால் கலைஞருக்கு எல்.ஐ.சி. அருகில் சிலை திறந்து வைக்கப்பட்டதும் அதன் பிறகு நடந்த நிகழ்வுகளும் தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும். அந்தப் பிரச்சனைக்கு நான் அதிகம் செல்ல விரும்பவில்லை. அது தேவையும் இல்லை.

இன்றைய தினம் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களுக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அண்ணாவின் அருகில் ஓய்வெடுத்து வரும் தலைவருக்கு, நாளெல்லாம் அண்ணா என்று உள்ளம் உருகிய தலைவருக்கு, அண்ணா சாலையில் -  அறிவாலயத்தில் - சிலைக்கு அருகில் சிலை வைக்கப்பட்டுள்ளது.

Stalin Speech in Karunanidhi Statue Function

வீடுவரை உறவு

வீதிவரை மனைவி

காடுவரை பிள்ளை

கடைசி வரை யாரோ

- என்று எழுதினார் கவியரசு கண்ணதாசன் அவர்கள்.

ஆனால் அண்ணாவுக்கு கடைசி வரை தான். கலைஞர் தான். கலைஞர் தான்.

கலைஞர் அவர்களை இழந்து இன்றுடன் 128 நாட்கள் ஆகிறது. காலையிலே கோபாலபுரம் செல்லும் போதும் அங்கிருந்து முரசொலி அலுவலகம் செல்லும் போதும் அதைத்தொடர்ந்து அண்ணா அறிவாலயம் வரும் போதும், மீண்டும் மாலையில் அறிவாலயம் வரும் போதும் கலைஞர் நம்மோடு இருக்கிறார், இன்றைக்கும் நம்மை இயக்குகிறார், அவர் மறையவில்லை, மறையவே இல்லை என்ற உணர்வு தான் என் உயிரில் ஓடிக்கொண்டு இருக்கிறது. எங்கோ மறைந்து நின்று இன்றைக்கும் நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கிறார் என்ற எண்ணம் தான் எனக்கு எப்போதும் இருக்கிறது.

தலைவரே நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?

’எனக்கு அக்காள்கள் தான் உண்டு, அண்ணன் இல்லை, ஆனால் அண்ணனாக நான் கருதுவது அன்பழகனைத் தான்’ என்று மூச்சுக்கு முன்னூறு தடவை பேராசிரியர், பேராசிரியர் என்று அழைப்பீர்களே, தலைவர்! உங்கள் பேராசிரியர் அவர்கள் முன்னிலையில் தான் அண்ணா அறிவாலயத்தில் விழா நடைபெற்றது; நீங்கள் எங்கே போய் விட்டீர்கள்?

உங்களால் சொக்கத்தங்கம் என்று வர்ணிக்கப்பட்ட சோனியா அம்மையார் அவர்கள் டெல்லியிலிருந்து இங்கே வந்து அமர்ந்து இருக்கிறார். தலைவர் அவர்களே நீங்கள் எங்கே போய்விட்டீர்கள்?

என்னுடைய தந்தையைப் போன்றவர் கலைஞர் என்று உங்களைப் பாராட்டிச் சொன்ன சோனியா இங்கே இருக்கிறார்; தலைவர் கலைஞர் அவர்களே எங்கே போய்விட்டீர்கள்?

Stalin Speech in Karunanidhi Statue Function

‘போராட்டக் குணம் படைத்தவர் தலைவர் கலைஞர்’ என்று உங்களுக்கு புகழாரம் சூட்டியிருக்கிறாரே இந்தியாவின் இளந்தலைவர் ராகுல்காந்தி, கலைஞர் எங்கே போய்விட்டீர்கள்?

1999ம் ஆண்டுகளில் டெல்லியில் கூட்டணி ஆட்சி நடந்தபோது பல்வேறு சிக்கலான நேரங்களில் எல்லாம் நல்லெண்ணத்துடன் உங்களுடன் இருந்து செயல்பட்ட ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு இங்கே இருக்கிறார்; கலைஞர் நீங்கள் எங்கே போய்விட்டீர்கள்?

உங்களின் சமூகநீதிக் கனவுகளை கேரள மாநிலத்தில் அமல்படுத்தி வரும் முதலமைச்சர் பினராயி விஜயன் இங்கே இருக்கிறார். தலைவர் கலைஞர் நீங்கள் எங்கே போய்விட்டீர்கள்?

டாக்டர் மன்மோகன் ஆட்சிக் காலத்தில் நாடாளுமன்ற விவகார அமைச்சராக இருந்து உங்களது ஆலோசனைகளை பெற்றுச் செயல்பட்ட புதுவை மாநில இன்றைய முதல்வர் நாராயணசாமி இங்கே இருக்கிறார். கலைஞர் அவர்களே நீங்கள் எங்கே போய்விட்டீர்கள்?

நீங்கள் எங்கும் போகவில்லை. போகவும் மாட்டீர்கள். லட்சக்கணக்கான தொண்டர்களின் உள்ளத்தில் சிம்மாசனம் போட்டு இங்குதான் இருக்கிறீர்கள். இந்தியாவைக் காக்கும் ஜனநாயகப் போர்க்களத்துக்கு நாங்கள் தயாராகிக் கொண்டு இருக்கிறோம்.

வேறுபாடுகள் இல்லாத, மாறுபாடுகள் இல்லாத, மதமாச்சர்யங்கள் இல்லாத, சாதி மோதல்கள் இல்லாத, ரத்தக்களறிகள் இல்லாத இந்தியாவை உருவாக்க நாம் சபதம் ஏற்க இங்கே கூடியிருக்கிறோம்.

இன்றைக்கு நரேந்திர மோடியால்:

இந்தியச் சமூகநல்லிணக்கத்துக்குக் கேடு ஏற்பட்டுள்ளது அதனால் எதிர்க்கிறோம்.

அவரால் இந்தியாவின் பொருளாதாரம் சீரழிந்துள்ளது. அதனால் எதிர்க்கிறோம்.

அவரால் சமூக நீதிக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது அதனால் எதிர்க்கிறோம்.

அவரால் மாநில சுயாட்சிக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. அதனால் எதிர்க்கிறோம்.

அவரால் நம் அரசியல் சட்டத்திற்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. அதனால் எதிர்க்கிறோம்.

ஒரு நாட்டின் சமூக நல்லிணக்கத்துக்கு கேடு ஏற்பட்டால், பொருளாதாரம் சீர்குலைந்தால் அதனைச் சரி செய்வது சாதாரணமான காரியம் அல்ல. மோடியின் ஐந்து ஆண்டுகால ஆட்சியில் இந்தியா பதினைந்து ஆண்டுகள் பின்னோக்கிப் போய்விட்டது. இன்னொரு ஐந்தாண்டுகள் அவரை ஆளவிட்டால் ஐம்பது ஆண்டுகள் இந்தியா பின்னோக்கிப் போய்விடும். அதுதான் உண்மை.

இன்னும் சொல்லப்போனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராகத் தன்னை நினைக்காமல் ஏதோ பரம்பரை மன்னர் ஆட்சி நடத்தும் மமதை கொண்டவராக மோடி இருக்கிறார். தன்னை பிரதமராக மட்டுமல்ல, தன்னை ஜனாதிபதியாகவும் தன்னையே உச்சநீதிமன்றமாகவும் தன்னையே ரிசர்வ் வங்கியாகவும், தன்னையே சி.பி.ஐ ஆகவும், வருமான வரித்துறையாகவும், நினைத்துக் கொள்கிறார் மோடி. அதனால் தான் எதிர்க்கட்சிகள் அனைவரும் சேர்ந்து நரேந்திரமோடிக்கு எதிராக ஒன்று சேர்ந்துள்ளோம்.

Stalin Speech in Karunanidhi Statue Function

இது ஏதோ நரேந்திர மோடியை வீட்டுக்கு அனுப்புவதற்காக மட்டுமல்ல. நாட்டையும் ஜனநாயகத்தையும் காப்பாற்றி நாட்டுக்கு நன்மை செய்வதற்காகச் சேர்ந்துள்ளோம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமையும் போதெல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்கு பல்வேறு சாதனைகளைச் செய்து கொடுத்தோம் என்பதை மார்தட்டிச் சொல்ல முடியும். அவற்றில் சிலவற்றை நான் அடையாளம் காட்டுகிறேன்.

அடக்கப்பட்ட மக்களின் கல்வி வேலைவாய்ப்புக்காக அகில இந்திய அளவில் மண்டல் கமிஷன் அமல்படுத்தப்பட்டது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான தமிழுக்கு செம்மொழி என்ற மகுடம் சூட்டப்பட்டது.

2427 கோடி மதிப்பீட்டில் சேதுசமுத்திரத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

57 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 4 ஆயிரத்து 676 கிலோ மீட்டர் நீள தேசிய நெடுஞ்சாலை போடப்பட்டது.

1650 கோடி செலவில் சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையில் பறக்கும் சாலைத் திட்டம் கொண்டுவரப்பட்டது.

சென்னை மாநகரில் மெட்ரோ ரயில் திட்டம்.

ஓகேனகல் கூட்டுக்குடி நீர்த்திட்டம்

---- இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். நான் கேட்கிறேன், இப்படி ஏதாவது ஒரு சாதனையை தமிழகத்திற்கு செய்ததாக இன்றைய பாஜக அரசாங்கத்தால் சொல்ல முடியுமா? பிரதமராக இருக்கும் நரேந்திர மோடியால் சொல்ல முடியுமா? தமிழகம் எந்தத் திட்டத்தை எல்லாம் எதிர்க்குமோ அதை எல்லாம் கொண்டு வந்த “சேடிஸ்ட்” பிரதமராக செயல்பட்டுக் கொண்டிருப்பவர் தான் நரேந்திர மோடி!

ஏன் இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறேன் என்றால் அவ்வளவு பெரிய பேரழிவு நடந்திருக்கிறது.

அண்மையிலே கஜா புயலில் 65 பேர் இறந்துள்ளார்கள். அரசாங்கக் கணக்குப்படி 14 ஆயிரம் கோடி இழப்பீடு கேட்கப்பட்டுள்ளது. விவசாயம் பழைய நிலைமைக்குத் திரும்ப வேண்டுமென்று சொன்னால் இன்னும் 20 ஆண்டுகள் ஆகும். இவ்வளவு பெரிய பேரிடர் குஜராத்திலோ, மகாராஷ்டிராவிலோ நடந்திருந்தால் நரேந்திரமோடி போயிருப்பாரா மாட்டாரா? தமிழ்நாடு என்பதால் வரவில்லை. ஆள் தான் வரவில்லை. அவருக்கு கடுமையான பணிகள், அடிக்கடி வெளிநாட்டிற்குச் சுற்றுப்பயணம் இருக்கிறது. பல வேலைகள் இருக்கலாம். ஒரு வார்த்தை கவலை - இரங்கல் தெரிவித்தாரா/ இரக்கம் காட்டினாரா? அந்தளவுக்கு தமிழ்நாடு பாவப்பட்ட மாநிலமா?

நான் கேட்கிறேன். 2016ம் ஆண்டு ஜூன் 12ம் நாள் அமெரிக்காவில் உள்ள ஒர்லாண்டோ மாகாணத்தில் துப்பாக்கிச் சூடு நடந்தது. இறந்தவர் குடும்பத்துக்கு உடனடியாக இரங்கல் தெரிவித்து ட்விட் செய்கிறார் இந்தியப் பிரதமர் மோடி.

2017 ஜுன் 18ம் நாள் போர்ச்சுக்கல் நாட்டில் காட்டுத்தீ பரவி உயிரிழப்பு ஏற்பட்டது. அவர்களுக்கு இரங்கல் தெரிவித்து ட்விட் செய்கிறார் இந்தியப் பிரதமர் மோடி. ஆனால், இந்தியாவுக்குள் இருக்கும் நாகப்பட்டினத்தில் புதுக்கோட்டையில் தஞ்சையில் இறந்து போனவர்களுக்கு இரங்கல் தெரிவிக்க மறுக்கிறார். இதனைத்தான் “சேடிஸ்ட்” மனப்பான்மை கொண்ட பிரதமர் நரேந்திர மோடி என்று நான் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறேன்.

தமிழர்கள் என்றால் அவ்வளவு அலட்சியமா? அதனால் தான் மோடியை வீழ்த்த வேண்டும் என்கிறோம். மோடியை வீழ்த்துவதற்கு 21 கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளன. இன்னும் பல கட்சிகள் வரத்தான் போகிரது. அதை இந்த நாடு பார்க்கத்தான் போகிறது.

இந்த மேடையில் அமர்ந்துள்ள சோனியா அம்மையார் அவர்களுக்கு ஒன்றை நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளேன். இந்திராகாந்தி அம்மையார் அவர்கள் ஒருமுறை சொன்னார்கள்... ஆதரித்தாலும் எதிர்த்தாலும் அதில் உறுதியாக இருக்கக்கூடியவர் கலைஞர் என்று. அந்தக் கலைஞரின் மகனாகிய நானும் ஆதரித்தாலும் எதிர்த்தாலும் உறுதியாக இருப்பவன் தான் என்பதை உறுதியோடு சொல்கிறேன்.

இந்த நேரத்தில் ஒன்றை முக்கியமாகச் சொல்ல வேண்டும் என்று கருதுகிறேன்.

தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து அளிக்கப்பட்டவுடன் அன்னை சோனியா காந்தி அவர்கள் தலைவருக்கு ஒரு கடிதம் எழுதினார்.

அந்தக் கடிதத்தில் மிகவும் மன உருகிப் போன கலைஞர் அவர்கள் என்ன எழுதினார் என்பதை அப்படியே படிக்கிறேன்.

"தமிழ் செம்மொழியாக ஆக, ஒரு வரலாறு உண்டு என்றால், அந்த வரலாற்றை - பெருமையை எனக்கு அளிக்கும் வகையில் நீங்கள் எனக்கு எழுதிய அந்தக் கடிதம் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டு, வைரங்கள் பதிக்கப்பட்டு, என்னுடைய கல்லறையிலே எதிர்காலத்தில் மாட்டப்பட வேண்டிய ஒன்று. என்னுடைய நினைவகத்திலே இருக்க வேண்டிய ஒன்று என்கின்ற அந்த பூரிப்போடு நீங்கள் எழுதிய அந்தக் கடிதத்திற்காக என்னுடைய நன்றியையும், வணக்கத்தையும், பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்'' என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அந்தத் தலைவரின் மகனாக இன்றைக்கு நான் சொல்ல விரும்புவது என்னவென்றால்,

In 1980 My Leader Thalaivar Kalaignar declared, “Welcome daughter of Pandit Nehru. Give a Stable Regime”

1980ம் ஆண்டு தலைவர் கலைஞர் அவர்கள், அன்னை இந்திராகாந்தி அவர்கள் பிரதமராக வேண்டும் என குரல் கொடுத்தபோது, நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக! என்றார்.

In 2004 My Leader Thalaivar Kalaignar declared first, “Welcome daughter-in-law of Indira Gandhi, India’s Daughter should Win”

2004ம் ஆண்டு சென்னைத் தீவுத் திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்னை சோனியாகாந்தி அவர்களை குறிப்பிடும் போது, இந்திராவின் மருமகளே வருக! இந்தியாவின் திருமகளே வெல்க! என்று முழக்கமிட்டார்.

In 2018 now in this dais on the occasion of unveiling Thalaivar Kalaignar Statue

2018 ஆம் ஆண்டில் இந்த மேடையிலிருந்து- அதுவும் தலைவர் கலைஞர் அவர்களின் சிலை திறப்பு விழாவில்,

I Propose

நான் அழைக்கிறேன்.

We will install a New Prime Minister in Delhi

நாம் டெல்லியில் புதிய பிரதமரை அமர வைப்போம்

We will build a New India

புதிய இந்தியாவை உருவாக்குவோம்.

As the Son of Thalaivar Kalaignar, I propose the candidature of Rahul Gandhi from Tamil Nadu

தலைவர் கலைஞரின் மகனாக தமிழகத்தில் இருந்து இப்போது வேட்பாளராக ராகுல் காந்தி அவர்களின் பெயரை நான் முன்மொழிகிறேன்.

"Welcome Rahul Gandhi, Give the Nation Good Governance"

“ராகுல்காந்தியே வருக! நாட்டுக்கு நல்லாட்சி தருக!”

Rahul has got the ability to defeat the Fascist Nazist Modi Government

பாசிச, நாசிச மோடி அரசை வீழ்த்தும் வல்லமை ராகுல்காந்திக்கு இருக்கிறது.

I appeal, to my respected all party leaders on the dais,

We will strengthen the hands of Rahul Gandhi, We will save this Nation!

ராகுல் காந்தியின் கரத்தை அகில இந்தியக் கட்சிகள் அனைத்தும் வலுப்படுத்துவோம், நாட்டைக் காப்பாற்றுவோம்; ஜனநாயக தீபத்தை ஏற்றுவோம் என்று தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலை திறப்பு விழாவில் உங்களோடு சேர்ந்து நானும் உறுதியெடுக்கிறேன்.

Follow Us:
Download App:
  • android
  • ios