சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியவுடன் எதிர்க்கட்சி தலைவரும் திமுக உறுப்பினருமான மு.க.ஸ்டாலின் சென்னை போராட்டம் மற்றும் கலவரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
அப்போது பேசிய ஸ்டாலின் போராட்டத்தை கையாள மாநில அரசு தவறி விட்டது என குற்றம் சாட்டினார்.
முதல்வர் பன்னீர்செல்வம் நேரடியாக வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தாததால்தான் இவ்வளவு பிரச்சனை வெடித்தது என்று கூறினார்.

பின்னர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது தொடர்பான முதல்வரின் விளக்கத்தில் திருப்தி இல்லை என்று திமுகவினர் வெளிநடப்பும் செய்து பத்திரிகையாளர்களிடம் பேட்டியளித்து விட்டு மீண்டும் கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ளனர்.
கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த ஸ்டாலின் கொந்தளிப்பில் இருந்த மாணவர்களிடம் முதல்வரே நேரில் வந்து பேசியிருந்தால் அனைத்தும் சுமூகமாக முடிந்திருக்கும். நீதி விசாரணை நிச்சயம் மேற்கொள்ள வேண்டும்.
அமைதியான போராட்டம் நடைபெறுகிறது என முதல் நாள் பாராட்டிய காவல்துறை அடுத்த நாளே தடியடி நடத்தியது ஏன்? என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

மேலும் காவல்துறையே வன்முறையை கட்டவிழ்த்து விட்டது வெட்ட வெளிச்சமாகி உள்ளதாகவும், பெண் காவலர்கள் வாகனங்களுக்கு தீ வைக்கும் காட்சிகள் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதையும் ஸ்டாலின் சுட்டிகாட்டினார்.

காவல்துறையின் இந்த அத்துமீறல் தொடர்பாக உரிய ஆதாரங்களுடன் வீடியோ காட்சிகளை ஆளுநரிடம் ஒப்படைதுள்ளதாகவும் தெரிவித்தார்.
அப்பாவிகள் மீது தாக்குதல் நடத்தியதையும், குடிசைகளுக்கு தீ வைத்ததையும் பலரும் பார்த்துள்ளதால் நீதி விசாரணை நடத்த வேண்டும் என தாங்கள் கோருவதாக ஸ்டாலின் தெரிவித்தார்.
