Asianet News TamilAsianet News Tamil

'நடுப்பகல் நாடகமாடுகிறார்'..! முதல்வரை தாறுமாறாக விமர்சித்த ஸ்டாலின்..!

“மீண்டும் நீட் மசோதா நிறைவேற்ற சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டத்தைக் கூட கூட்டத் தயார்”என்று சட்டமன்றத்தில் அறிவித்தவர் ‘சாட்சாத்’முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிசாமிதான். ஆனால் மூன்று வருடங்களாக மத்திய அரசிடமிருந்து விளக்கமும் பெறவில்லை. சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தையும் கூட்டவில்லை.

stalin slams cm
Author
Chennai, First Published Jan 5, 2020, 5:29 PM IST

நீட் தேர்வு கட்டாயம் என்பதை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசு தற்போது உச்சநீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்திருக்கும் நிலையில் அதை விமர்சித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க 6.1.2020 கடைசி தேதி என்ற நிலையில், வெறும் இரண்டு நாள் இடைவெளியில்,“நீட் தேர்வு கட்டாயம் என்று மருத்துவ கவுன்சில் மேற்கொண்ட சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும்” என்று அதிமுக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து, “நீட் தேர்வை ரத்து செய்ய நாங்களும்  நடவடிக்கை எடுக்கிறோம்” என்று, காட்டிக் கொண்டு, தமிழக மக்களை ஏமாற்ற நான்கு வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் ஒரு நடுப்பகல் நாடகத்தை முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிச்சாமி நாணமின்றி அரங்கேற்றியிருக்கிறார் என்பதையே வெளிப்படுத்துகிறது.

stalin slams cm

திராவிட முன்னேற்றக் கழக அரசு தொடர்ந்த வழக்கில், “அகில இந்திய அளவில் இப்படியொரு நீட் தேர்வை அறிமுகப்படுத்த இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை” “ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனி பாடத்திட்டம் இருக்கிறது. தனித்தனி பயிற்று முறை இருக்கிறது. ஆகவே அனைத்து மாணவர்களுக்கும் “அகில இந்தியத் தேர்வு” என்பது கிராமப்புற மாணவர்களைப் பெரிதும் பாதிக்கும்” “நுழைவுத் தேர்வுகளை எழுதுவதற்கு நகர்ப்புறத்தில் உள்ள பயிற்சி வசதிகள், பயிற்சி மையங்கள் கிராமப் புறங்களில் இல்லை. ஆகவே நகர்ப்புற மாணவர்களுடன் கிராமப் புற மாணவர்கள் சரி சமமாக போட்டியிட்டு நுழைவுத் தேர்வை எழுத முடியாது” என்ற அடிப்படைக் காரணங்களைச் சுட்டிக்காட்டி 18.7.2013 அன்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு “நீட் தேர்வு அறிவிப்பு ஆணையை”ரத்து செய்து தீர்ப்பளித்தது.

stalin slams cm

இந்தத் தீர்ப்பை எதிர்த்த சீராய்வு மனுவின் மீது, மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்ததும், ஏதோ உள் நோக்கத்துடன், உச்சநீதிமன்றத்தில் அவசர விசாரணை கோரப்பட்டு- 11.4.2016 அன்று அந்தத் தீர்ப்பு ரத்து செய்யப்பட்டது. அப்போது  நமக்கென்ன என்று வாய்மூடி அமைதி காத்தது மாநிலத்தில் இருந்த அதிமுக ஆட்சிதான். சீராய்வு மனு விசாரணையின் போதே தமிழக அரசின் சார்பில் “மருத்துவக் கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை”என்றும், “திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதை உச்சநீதிமன்றம் ஏற்கனவே உறுதி செய்துள்ளது”என்றும் வாதிட்டிருக்க நல்ல வாய்ப்பு இருந்தும், அதைக் கோட்டை விட்டு நீட் தேர்வு மீண்டும் வருவதற்குக்  காரணமாக இருந்ததே அதிமுக அரசுதான்.

stalin slams cm

 “நீட் கட்டாயம்” என்று சட்டம் பிறப்பித்த போதும் அதிமுக அரசுதான் ஆட்சியில் இருந்தது. நீட் தேர்வை அமல்படுத்தி- அனிதா உள்ளிட்ட மாணவிகள் தற்கொலைக்கும், பெற்றோரின் மரணத்திற்கும் வித்திட்டதும் அதிமுக அரசுதான். தமிழகத்தில் தன்னெழுச்சியாக நடைபெற்ற மாணவர் போராட்டங்களினாலும், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் போராட்டத்தினாலும், “நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும்”என்று 1.2.2017 அன்று இரு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் மூலம் 18.2.2017 அன்றே குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அந்த மசோதாக்கள் மீது ஒப்புதல் பெற ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடாத, அலட்சியமாக இருந்த அரசு அதிமுக அரசுதான். இந்த மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதை பேரவைக்குச் சொல்லாமல் மறைத்து- “திருப்பிதான் அனுப்பியுள்ளார்கள். காரணம் கேட்டிருக்கிறோம்”என்று சமாளிப்புக்காக விதண்டாவாதம் நடத்தி- மத்திய அரசின் விளக்கம் வந்ததும் தமிழக அரசே வழக்குத் தொடுக்கும் என்று சட்டமன்றத்தில் அறிவித்ததும் அதிமுக ஆட்சிதான். “மீண்டும் நீட் மசோதா நிறைவேற்ற சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டத்தைக் கூட கூட்டத் தயார்”என்று சட்டமன்றத்தில் அறிவித்தவர் ‘சாட்சாத்’முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிசாமிதான். ஆனால் மூன்று வருடங்களாக மத்திய அரசிடமிருந்து விளக்கமும் பெறவில்லை. சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தையும் கூட்டவில்லை. இரு மசோதாக்களையும்  நிராகரித்ததை எதிர்த்து இதுவரை வழக்கும் தொடுக்கவில்லை.

stalin slams cm

மசோதாவிற்கு ஒப்புதல் கேட்டு மத்திய அரசை எதிர்த்து வழக்குப் போட்டால், தனது முதலமைச்சர் பதவிக்கே ஆபத்து வந்து விடும் என்ற அச்சத்தில்- இப்போது உச்சநீதிமன்றத்தின் கதவுகளை முதலமைச்சர் திரு எடப்பாடி திரு பழனிசாமி தட்டியுள்ளார். திரு பழனிசாமி அவர்களுக்குக் காலம் கடந்து நினைவு பிறந்திருந்தாலும், இந்த வழக்கிலாவது முறைப்படி மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடி- கிராமப்புற மாணவர்களை பாதிக்கும்- சமூக நீதிக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் மருத்துவக் கல்வியில் சேருவதற்கான நீட் தேர்வு இந்தக் கல்வியாண்டே ரத்தானால்தான், மிகவும் தாமதமான நடவடிக்கை - இது யாருக்கும் பயனளிக்காது என்ற பழியிலிருந்து, இந்த ஒரு பிரச்சினையிலிருந்தாவது, அதிமுக அரசினர் தம்மைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்!

இவ்வாறு ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios