Asianet News TamilAsianet News Tamil

உச்ச நீதிமன்றத்தில் உடனே மேல்முறையீடு செய்யுங்க ஸ்டாலின்... வைகோவின் பரபரப்பு அறிக்கை..!

மராத்தா வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை  சமூக நீதியின் தாயகமாம் தமிழ்நாட்டில் பொறுப்பேற்கிற திமுக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். 
 

Stalin should immediately appeal to the Supreme Court... Vaiko's sensational statement..!
Author
Chennai, First Published May 5, 2021, 9:50 PM IST

இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “மகாராஷ்டிர மாநிலத்தில், கல்வி, அரசு வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில், 2019ஆம் ஆண்டு பாஜக அரசு நிறைவேற்றிய சட்டம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருப்பது சமூக நீதியைக் கேள்விக்குறியாக்கி இருக்கின்றது. இந்தச் சட்டத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், வேலைவாய்ப்பில் 12 விழுக்காடு, கல்வியில் 13 விழுக்காடு, மராத்திய (மராத்தா மக்கள்) மக்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கலாம் என்று மும்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்திருந்தது. அந்தத் தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்கள். அந்த வழக்கில், இன்று நீதிபதிகள் அசோக் பூஷன், எல்.என்.ராவ், ஹேமந்த் குப்தா, ரவிந்திர பாட், எஸ்.அப்துல் நசீர் ஆகிய ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பில், மராத்திய மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம், இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று கூறியிருக்கின்றது.Stalin should immediately appeal to the Supreme Court... Vaiko's sensational statement..!
இந்த வழக்கில், ஐந்து நீதிபதிகளும் வெவ்வேறு விதமாக நான்கு தீர்ப்புகளை வழங்கியுள்ளனர். ஐந்து நீதிபதிகளும் இணைந்து அளித்த ஒரு தீர்ப்பில், மராத்தியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிய ஜெ.கெய்க்வாட் ஆணையத்தின் அறிக்கையை ஏற்க முடியாது என அறிவித்திருக்கின்றனர். 'மராத்தியர்களான ஓபிசி மக்களுக்குத் தனியாக இட ஒதுக்கீடு அளிப்பது, அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 14-க்கு எதிரானது என்றும், 1992 இல் இந்திரா சஹானி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, இட ஒதுக்கீட்டின் அளவு 50 விழுக்காட்டுக்கு மேல் போகக் கூடாது' என்றும் சுட்டிக்காட்டி உள்ளனர்.
நீதிபதிகள் எல்.என்.ராவ், ஹேமந்த் குப்தா, ரவீந்திர பாட் ஆகியோர் அளித்துள்ள தீர்ப்பில், 'அரசியலமைப்புச் சட்டத்தின் 102-வது திருத்தச் சட்டத்தில், சமூக மற்றும் பொருளாதார அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவில் மாற்றங்கள் செய்ய, குடியரசுத் தலைவருக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது; மத்திய அரசின் பரிந்துரையில் புள்ளிவிவரங்கள் அடிப்படையில், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரையின்படிதான் குடியரசுத் தலைவர் மாற்றங்களைச் செய்வார்; மாநிலங்கள் ஆலோசனைகளை மட்டுமே வழங்க முடியும்; பிற்படுத்தப்பட்ட பிரிவினர் பட்டியலை மாநில அரசுகள் திருத்தி அமைக்க முடியாது' என்று குறிப்பிட்டுள்ளனர்.Stalin should immediately appeal to the Supreme Court... Vaiko's sensational statement..!
ஆனால், நீதிபதிகள் அசோக் பூஷன் மற்றும் அப்துல் நசீர் இருவரும், 'சமூக மற்றும் பொருளாதார அடிப்படையில், பிற்படுத்தப்பட்ட பிரிவினரில் மாற்றம் செய்ய, மத்திய, மாநில அரசுகள் இரண்டுக்கும் அதிகாரம் உண்டு என்றும், சமூக மற்றும் பொருளாதார அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர் குறித்த பட்டியலை மத்திய அரசு புதிதாக வெளியிட வேண்டும்' என்றும் தீர்ப்பளித்துள்ளனர். உச்ச நீதிமன்றத்தில் இன்று வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு சமூக நீதிக் கோட்பாட்டைக் கேள்விக்கு உள்ளாக்குவதுடன், மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிப்பதாகவும் அமைந்திருக்கின்றது. இந்த வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வில் இடம் பெற்று இருந்த நீதிபதிகள், மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கி இருக்கின்றார்கள்.
ஆனால், இதற்கு முன்பே தமிழ்நாட்டில், 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டு உரிமை நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. எனவே, தற்போது உச்ச நீதிமன்றம் வழங்கிய இந்தத் தீர்ப்பை எதிர்த்து, எந்த மாநிலமும் மேல்முறையீடு செய்யலாம். எனவே, இதர பிற்படுத்தப்பட்டோரின் இட ஒதுக்கீடு உரிமை மற்றும் மாநில அரசுகளின் உரிமையைப் பாதுகாக்கின்ற வகையில், இந்தத் தீர்ப்பை, கூடுதல் நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்குக் கொண்டு வர, சமூக நீதியின் தாயகமாம் தமிழ்நாட்டில் பொறுப்பேற்கின்ற திமுக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்" என்று அறிக்கையில் வைகோ தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios