மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞருக்கு திமுக சார்பில் 5 மாவட்டங்களில் புகழ் வணக்கக் கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில், “கடலில் தவிக்கும் கலன்களுக்கு கரை காட்டும் பணியைச் செய்வது கலங்கரை விளக்கம். திமுக என்ற கப்பலுக்கு கடற்கரையிலே பேரறிஞர் அண்ணா - தலைவர் கலைஞர் என இரண்டு கலங்கரை விளக்கங்கள் ஒரே திசையில் ஒளி வீசி வழிகாட்டிக் கொண்டிருக்கின்றன.

அந்த ஒளியின் வழியில் பயணித்தால், அவர்கள் வழியிலேயே லட்சியக் கரையினைத் தொட்டுவிட முடியும்” என்று கூறியுள்ளார்.

தமிழ்நாட்டின் 5 மாநகரங்களில் “கலைஞரின் புகழுக்கு வணக்கம்” செலுத்தும் நினைவேந்தல் கூட்டங்கள் நடைபெற இருக்கின்றன என்றும் கலைஞருக்கு இரங்கல் என்பதும் நினைவேந்தல் என்பதும் வெறும் சடங்கல்ல, சம்பிரதாயமல்ல. லட்சியம் காப்பதற்கான சூளுரை என்றும் கூறியுள்ள ஸ்டாலின், “மரணத்தின் விளிம்பில் நின்றபோதும் மண்டியிடாமல் போரிட்ட மாவீரர்கள் சிலர் உண்டு. ஆனால், மரணத்திற்குப் பிறகும் தனது போராட்ட உறுதி குலையாமல், கொள்கை எனும் ஆயுதத்தைக் கைவிடாமல் களத்தில் நின்று வெற்றி பெற்ற வீரத் தலைவர் என்ற புது வரலாறு படைத்தவர் கலைஞர்.

எந்த நிலையிலும் குலையாத எஃகு உள்ளம் கொண்டவர் கலைஞர். நெருக்கடி நிலையா, எதிரிகளின் வசவா, வீண்பழியா, ஆட்சிக் கலைப்பா, தேர்தல் தோல்வியா, தொடர்ந்து துரத்தும் துரோகங்களா, துயரம் தரும் பிரிவுகளா எதுவாக இருந்தாலும் அதனை இயல்பாக எதிர்கொண்டு திமுகவை காத்ததுடன், கட்சியைக் காக்கும் தன் உயிரினும் மேலான உடன்பிறப்புகளையும் கண் போலக் காத்தவர்” என்று கலைஞருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

கலைஞர் என்பது வெறும் பெயரல்ல. அது திராவிட இனத்தின் நிரந்தர அடையாளம் என்றும் கலைஞரின் உயிர் பிரியவில்லை. ஒவ்வொரு உடன்பிறப்பின் உணர்விலும் கலந்திருக்கிறது என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொண்டர்கள் பக்கபலமாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் திமுகவை கட்டிக்காக்கும் பொறுப்பை தான் துணிந்து ஏற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், “நாம் நிறைவேற்றி முடிக்க வேண்டிய சவாலான பணிகள் நிறைய இருக்கின்றன. திமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் சிகரமாக உயர்ந்திருந்த தமிழ்நாட்டை படுகுழியில் தள்ளியிருக்கிறார்கள் மாநில ஆட்சியாளர்கள். மதவெறியை விதைத்து - மாநில உரிமைகளைப் பறித்துக் கொண்டிருக்கிறார்கள் மத்திய ஆட்சியாளர்கள். தலைவரை இழந்த கட்சியில் என்ன நடக்கிறது என்பதில் நம்மை விட ‘அக்கறை’ காட்டுகிறார்கள் அரசியல் எதிரிகள்.

நான் கலைஞரால் வளர்த்தெடுக்கப்பட்டவன். சலசலப்புகளுக்கு அஞ்ச மாட்டேன். கழகத்திற்கு உள்ளும் புறமும் உருவாக்கப்படும் சவால்களை வென்றுகாட்டுவேன், கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளாம் உங்களின் துணையோடு!

தந்தை பெரியாரின் ஒளியில் - பேரறிஞர் அண்ணா காட்டிய நெறியில் - கலைஞர் நடந்த வழியில் தொடர்ந்து நடைபோடுவோம். தொய்வின்றி செயல்படுவோம்” என்று தெரிவித்துள்ளார்.