தமிழகத்தில் நீட் தேர்வு, இந்தி திணிப்புக்கு அதிமுக அரசு, மத்திய அரசுக்கு அடி பணிந்து செல்வதே காரணம் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், செய்தியாளர்களிடம் கூறினார்.

சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, முறைகேடு நடந்ததாக திமுக சார்பில் வழக்கு தொடர்ந்தோம்.. அதேபோல் சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தோம். ஆனால், அதில் நடவடிக்கை இல்லை.

நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து 6 மாதம் ஆகிவிட்டது. இதனால், அதன் மீது மீண்டும் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு சட்டத்தில் இடம் இருக்கிறது. அதனால், மீண்டும் தீர்மானம் கொண்டு வரப்படும்.

அதிமுகவில் பிளவு ஏற்பட்டதற்கு பாஜகதான் காரணம் என பலரும் கூறுகின்றனர். அதுபற்றி எனக்கு தெரியாது. ஆனால், அதிமுக அரசு, மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு அடிபணிந்து செல்கிறது என்பது மட்டும் மக்களுக்கே நன்றாக தெரியும்.

தமிழகத்தில் நீட் தேர்வு, இந்தி திணிப்பு ஆகியவற்றை எதிர்க்காமல் தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறது. பாஜக அரசின் திட்டங்களுக்கு, ஆளும் அதிமுக அரசு, அடிபணிந்து செல்வதால், தொடர்ந்து மத்திய அரசு, தமிழகத்துக்கு துரோகத்தை இழைத்து வருகிறது.

நேற்று நந்தனத்தில் நடந்த முரசொலி பவளவிழா கூட்டம், திடீர் மழை காரணத்தால், தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. இதே விழா, இதை விட பிரமாண்டமாக செப்டம்பர் 5ம் தேதி நடைபெறும். அதில், அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.