சென்னை வேளச்சேரியில் ஸ்டாலின் குடும்பம் நடத்தும் பள்ளிகள் முன்பு போராட்டம் நடத்துவேன் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரில் அவர் பேசும்போது, ‘’தி.மு.க மற்றும் திராவிடர் கழக கட்சிகள் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தப்போவதாக கூறி உள்ளன.

மு.க.ஸ்டாலின் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தபோவதாக கூறி உள்ளார். நான் சென்னை, வேளச்சேரியில் ஸ்டாலின் குடும்பம் நடத்தும் சன் சைன் மாண்ட்டி சோரி மற்றும் சன் சைன் ஹையர் செகண்டரி பள்ளிகளின் முன் போராட்டம் நடத்துவேன். இந்தி திணிப்பு செய்வது ஸ்டாலின் குடும்பம்தான். தி.மு.க மூத்த தலைவர் அன்பழகனின் பேரன் நடத்தும் சி.பி.எஸ்.இ பள்ளியில் தமிழில் பேசினால் அபராதம் விதிப்பதை எதிர்த்து நான் போராட்டம் நடத்துவேன். இவர்கள் எல்லோரும் தமிழ் உணர்வாளர்கள் இல்லை. தமிழ் விரோதிகள்.

தி.மு.க சார்பில் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தினால், அதற்கு எதிர்போராட்டம் நடத்துவேன். நான் ஏற்கனவே சொன்ன மாதிரி தி.மு.க. முக்கிய தலைவர்கள் நடத்தக் கூடிய சி.பி.எஸ்.இ. பள்ளியின் பட்டியலை சென்ற ஆண்டே வெளியிட்டு உள்ளேன். அந்த 45 பள்ளிகளிலும் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தை எடுத்து விட்டு இவர்கள் சொல்லும் சமச்சீர் கல்வியை நடத்த வேண்டும். சமச்சீர் கல்வியை கொண்டு வந்த தி.மு.க.வினர் தான் சமச்சீர் கல்வியை நடத்த வேண்டும்’’ என அவர் தெரிவித்தார்.