கடந்த தேர்தலில் திமுகவின் பிரமாண்ட வெற்றியில் முக்கிய பங்கு வகித்த, உதயநிதி ஸ்டாலின்க்கு திமுகவில் முக்கிய பதவி கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் பிஜேபி கூட்டணி தனி  பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க இருக்கிறது. தமிழகத்தில் திமுக கூட்டணி தேனியை தவிர மற்ற 38 இடங்களை அசால்ட்டாக தட்டித் தூக்கியது. திமுகவின் இந்த பிரமாண்ட வெற்றிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது ஸ்டாலின் பிரச்சார யுக்தியும், பிஜேபி, அதிமுக கூட்டணிக்கு எதிரான மக்களின் மனநிலையே காரணம் என்று சொன்னாலும், ஸ்டாலின் மற்றும் உதயநிதியின் பிரசாரமும் முக்கிய பங்கு வகிக்கிறது.

மேலும், இந்த நாடாளுமன்ற தேர்தலில் நடிகரும், திமுக தலைவர் ஸ்டாலின் மகன் உதயநிதி தமிழகத்தில் அனைத்து இடங்களுக்கும் சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். இவருடைய பிரச்சாரமும், அணுகுமுறையும் பெருவாரியான கட்சி தொண்டர்களையும், சாதாரண மக்களையும் கவர்ந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் கட்சியின் முக்கிய பதவி கொடுத்தால் இனி வரும் காலங்களில் கட்சிக்கு பலமாக இருக்கும் என சொல்கின்றனர்.

இந்நிலையில், திமுகவின் மாவட்ட செயலாளர்களும், எம்எல்ஏக்களும், நிர்வாகிகளும் கட்சி தலைமைக்கு கோரிக்கை வைத்ததாக சொல்லப்படுகிறது. அவர்கள் வைத்துள்ள இந்த கோரிக்கையில் முக்கிய அம்சமாக தேர்தலில் கட்சிக்காக கடுமையாக உழைத்த உதயநிதிக்கு திமுகவில் கட்சி பொறுப்பு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர். கட்சி நிர்வாகிகளின் வேண்டுகோளுக்கு இணங்க கட்சி மேலிடம் இதை பரிசீலனை செய்ய உள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். அநேகமாக அவருக்கு ஸ்டாலின் முதல் முதலில் வகித்த பதவியான திமுக இளைஞரணி செயலாளர் பதவி கொடுக்கப்படும் என்று நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்தது தகவல் கசிகிறது.