Asianet News Tamil

போய் வாருங்கள் பெரியப்பா..! அன்பழகனுக்கு பிரியாவிடை கொடுத்து உடன்பிறப்புகளிடம் உருகிய ஸ்டாலின்..!

இனமானப் பேராசிரியப் பெருந்தகையே.. இதயத்தில் வீற்றிருக்கும் பெரியப்பா அவர்களே.. இந்த இயக்கத்தின் தலைவர் - எனது தந்தையை நீண்ட காலம் பிரிந்திருக்க மனமின்றி, நீங்களும் அவர் சென்ற இடத்திற்கே எம்மை தவிக்க விட்டுச் சென்றுவிட்டீர்கள்.. போய்வாருங்கள் பெரியப்பா... !

stalin's letter to party members about Anbazhagan's death
Author
Tamil Nadu, First Published Mar 8, 2020, 6:15 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் தனது 98 வயதில் நேற்று காலமானார். அரசியல் தலைவர்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் அஞ்சலி செலுத்திய பிறகு நேற்று மாலை அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. அன்பழகனின் மறைவு திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினரை கடும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இந்தநிலையில் 'யாருக்கு யார் ஆறுதல் சொல்வது? யாரிடம் யார் தேறுதல் பெறுவது?'  என்று தலைப்பிட்டு ஸ்டாலின் கட்சி தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

கண்ணீரும் புன்னகையும் மாறி மாறிப் பயணிக்கும் வாழ்க்கையிலும், வெற்றியும் தோல்வியும் அடுத்தடுத்து  ஏற்படும் இயக்கத்திலும்,  எந்தச் சூழலையும் சமமான மனநிலையுடன் அணுகும் அதிசயிக்கத்தக்க ஆற்றல் வாய்ந்த நம் கழகத்தின் பொதுச்செயலாளர் இனமானப் பேராசிரியர் அவர்கள்,  98 வயதில் தன் பயணத்தை நிறைவு செய்திருக்கிறார்; நம்மையெல்லாம் கண்ணீரில் மிதக்கவிட்டுச் சென்றிருக்கிறார். நிறை வாழ்வு கண்டவர்; கண்டு இனத்திற்கும் மொழிக்கும் மிகுபயன் விளைத்தவர் நம் பேராசிரியர் பெருந்தகை. முதுமையினால் ஏற்படும் உடல்நலக்குறைவினால் அவர் முடிவெய்தினார் என்றாலும், இன்னும் சில ஆண்டுகள் அவர் இருந்திருக்கக்கூடாதா, நூற்றாண்டு வயது கண்ட  திராவிட இயக்கத்தின் தலைவர்களில் நூறாண்டு கண்ட ஒரே தலைவர் என்ற பெருமையையும், வாழ்த்துகளையும் நம் அனைவருக்கும் வழங்கி, கழகம் மீண்டும் ஆட்சியில் அமரும் மாட்சிமை கண்டு பெருமிதம் கொண்டு, அதனை வழிநடத்தும் முறைகளை நமக்குக் கற்றுத்தரும் அந்தத் தத்துவப் பேராசிரியரை, எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இழக்கச் சம்மதிப்போமா?

பேராசிரியப் பெருந்தகையின் கொள்கை வழிப் பயணம் நெடுகிலும்,  இலட்சியப் பற்று - செயல்பாட்டு உறுதி - தலைமைக்குத் துணை நிற்கும் கட்டுப்பாடு - தகைமைசால் பெருமக்களும் போற்றும் கண்ணியம் இவற்றிலிருந்து இம்மியும் விலகாமல் கறுப்பு - சிவப்பு நிறத்தை உறவாக - உதிரமாக - உயிராகப் போற்றி வாழ்ந்தவர். அந்த இருவண்ணக் கொடியின் நிழலில் வளர்ந்தவர்களான நாம், அந்தக் கொடி காட்டும் கொள்கையை எந்நாளும்  உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்பதைத் தன் வாழ்நாளெல்லாம் வலியுறுத்தியவர் பேராசிரியர் அவர்கள். தந்தை பெரியாரிடம் அன்புடன் பழகி, இலட்சியங்களைப் பயின்றவர். பேரறிஞர் அண்ணாவிடம் தம்பியாக நெருங்கி இயக்கம் வளர்த்தவர். முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் தோழராக - மூத்த சகோதரராக,  தோள் கொடுத்து சோதனைகளிலும் நெருக்கடிகளிலும் கழகத்தை மீட்பதில் உற்றதுணையாக நின்றவர். அண்ணா அறிவாலயத்திற்கு தலைவர் கலைஞர் அவர்கள் வரும்  நாளெல்லாம், பேராசிரியர் எங்கே என்று கேட்டு, அவர் வருகையை உறுதி செய்து, அவருடன் நெடுநேரம் ஆலோசனைகளை மேற்கொண்டதை நேரில் கண்ட என் மனது எப்படி மறக்கும்?

தலைவர் கலைஞர் அவர்கள் உடல்நலன் குன்றிய நேரத்திலும், பேராசிரியர் அவர்கள் சந்திக்க வந்துவிட்டால், புதிய உற்சாகம் பெற்று, இளமைக்கால நினைவுகளுடன் இயக்கம் பற்றிய சிந்தனைகளில் அவர்கள் இருவரும் மூழ்கியதையும் நேரில் கண்டு மெய்சிலிர்த்திருக்கிறேன். தன்னைவிட வயதில் மூத்த - தன் வயதுக்கு இணையான தலைவர்களுடன் மட்டுமல்ல, தன்னைவிட வயதில் மிகவும் இளையவர்களிடமும் அதே அன்பை அள்ளி வழங்கியவர் பேராசிரியர் பெருந்தகை அவர்கள். அந்த அன்பை அவரிடமிருந்து  அதிகமாகப் பெறும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. தன் பெயரில் உள்ள அன்பை என்னிடம் கொடையாக வார்த்த இனமானப் பேராசிரியர் அன்பழகனார் எதிர்பார்த்தது ஒன்றே ஒன்றைத்தான். அது, கழகம் எனும் இலட்சியக் கோட்டையைக் கட்டிக் காத்திடும் கடின உழைப்பு - வலிமை மிகு உழைப்பு.

திராவிட முன்னேற்றக் கழகம் எனும் இலட்சியப் பேரியக்கத்தின் துணைப் பொதுச்செயலாளராக, பொருளாளராக, செயல் தலைவராக ஒவ்வொரு பொறுப்பினைப் பெற்றபோதும்,  பேராசிரியரின் வாழ்த்துகள் எனக்கு ஊக்கமும் உரமுமாக அமைந்தன. சட்டமன்ற உறுப்பினராக, உள்ளாட்சித்துறை அமைச்சராக, துணை முதல்வராக, எதிர்க்கட்சித் தலைவராக,  ஒவ்வொன்றாகப் பொறுப்புகளை சுமந்த காலத்திலும் பேராசிரியரின் ஆலோசனைகளைக் கேட்டு, செயலாற்றி, அவரது அன்பான வாழ்த்துகளைப் பெறத் தவறியதில்லை. கழகத்தின் தலைமைப் பொறுப்புக்கு உங்களில் ஒருவனான நான் தேர்ந்தெடுக்கப்பட்டபோதும் பேராசிரியரின் வாழ்த்துகள், தலைவர் கலைஞர் இல்லாத சூழலில் அந்தக் குறை தெரியாதபடி செய்தன. தலைவர் கலைஞர் அவர்களுக்கு உடன்பிறந்த அண்ணன் இல்லை. ஆனால், அவரது ‘உடன்பிறப்பான’ அண்ணனாக பேராசிரியர் இருந்தார். தலைவர் கலைஞரின் மகனான எனக்கு பெரியப்பா இல்லை. பேராசிரியர்தான் பெரியப்பா என்ற நிலையில் பெரும் பாசத்துடன் அரவணைத்து, ஆலோசனைகள் - அறிவுரைகள்  வழங்கி, வழிநடத்தினார்.

அப்பாவையும் பெரியப்பாவையும் இரண்டாண்டு இடைவெளிக்குள்ளாக அடுத்தடுத்து இழந்த நிலையில், இயற்கை  பறித்துக்கொண்ட சதியால், கழகத்தின் தலைவர் என்ற முறையிலும், தனிப்பட்ட வகையிலும் கலங்கி நிற்கிறேன். உங்களில் ஒருவனான நான் மட்டுமல்ல, ஒரு கோடிக்கும் மேலான உறுப்பினர்களைக் கொண்ட தி.மு.கழகத்தின் உடன்பிறப்புகள் அனைவருமே உயிரும் உடலும் கலங்கித்தான் நிற்கிறோம். யாருக்கு யார் ஆறுதல் சொல்வது? யாரிடம் யார் தேறுதல் பெறுவது? என்று தெரியாத நிலையில், நமக்கு நாமே ஆறுதலாகவும்,  நம்மை நாமே தேற்றிக்கொண்டும்,  இனமானப் பேராசிரியர் வாழ் நாளெல்லாம் எண்ணிய வழியில், இலட்சியச் சுடரை ஏந்திச் செல்வதுதான், நம் முன் உள்ள  முக்கியக் கடமையாகும்.

அரசியல்  மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு அனைவரிடமும் பண்புடன் பழகிய பேராசிரியப் பெருந்தகை அவர்களுக்கு இரங்கல் அறிக்கை வெளியிட்ட தமிழக முதலமைச்சர், நேரில் வந்து மரியாதை செலுத்திய துணை முதலமைச்சர், அமைச்சர் உள்ளிட்ட அ.தி.மு.க.வினர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழமைக் கட்சித் தலைவர்கள் - நிர்வாகிகள், ஓய்வுப் பெற்ற உயர் அதிகாரிகள், மற்ற கட்சிகளின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள், தமிழறிஞர்கள், பொதுநல ஈடுபாடு கொண்டோர், கலையுலகத்தினர், வணிகத்துறையினர், பலதுறைகளையும் சார்ந்த சான்றோர்கள் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற அரசியல் குடும்பத்தின் தலைவன் என்ற முறையில்,  கண்ணீர் கலந்த நன்றியினை உரித்தாக்குகிறேன்.

இனமானப் பேராசிரியப் பெருந்தகையே.. இதயத்தில் வீற்றிருக்கும் பெரியப்பா அவர்களே.. இந்த இயக்கத்தின் தலைவர் - எனது தந்தையை நீண்ட காலம் பிரிந்திருக்க மனமின்றி, நீங்களும் அவர் சென்ற இடத்திற்கே எம்மை தவிக்க விட்டுச் சென்றுவிட்டீர்கள்.. போய்வாருங்கள் பெரியப்பா... ! தமிழ் இனம் - மொழி - பண்பாடு காக்கும் திராவிட இயக்கத்தின் சளைக்காத நெடும்பயணத்தை நீங்கள் தந்த சுடரினை ஏந்தி, அந்தச் சுடரொளியில்  தொடர்ந்திடுவோம். பெறப் போகும் வெற்றி மலர்களை, முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களுக்கும் இனமானப் பேராசிரியரான தங்களுக்கும்  காணிக்கையாக்கிடுவோம்! இது உறுதி!

இவ்வாறு ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.  

Follow Us:
Download App:
  • android
  • ios