கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை தடுக்கும் வகையில் பொதுமக்கள் அனைவரும் வீடுகளிலேயே இருக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் காரணமாக இந்திய அளவில் உள்ள 75 மாவட்டங்களில் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களிலும் அத்தியாவசியத் தேவைகள் மட்டும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நேரத்தில் அரசு முழு வீச்சில் களமிறங்கி மக்களுக்கு நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கொரோனா நோய் விவகாரத்தில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும், முதல் கேஸ் ரிப்போர்ட் ஆனதிலிருந்து இன்றுவரை பாதிக்கப்பட்டுள்ள நகரங்களை, மாநகரங்களைத் தனிமைப்படுத்துவதில் தமிழக அரசு இன்னும் வேகமாகச் செயல்படாதது கவலையளிக்கிறது. ‘சட்டமன்றத்தை நடத்துவேன்’ என்று பிடிவாதம் பிடித்ததும், பள்ளித்தேர்வுகளை தொடர்ந்து நடத்துவதும் ஒரு பொறுப்பான அரசுக்கு அழகல்ல. கல்வி நிலையங்களை 31-ந் தேதிவரை மூடினாலும் தேர்வுகள் வைத்து மாணவர்களையும், ஆசிரியர்களையும் பணிக்கு அழைத்தது தவறான அணுகுமுறை. இவையெல்லாம் அரசின் அலட்சியத்திற்கு ஓர் அடையாளம்.

இவற்றையெல்லாம் சரிசெய்து கொண்டு தமிழக அரசு தீவிர நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் என இன்னமும்கூட நம்புகிறேன். கொரோனா நோய் பரிசோதனை கட்டணமாக ரூ.4500 நிர்ணயிக்கப்பட்டிருப்பது அதிகமாக இருப்பதால், அந்தக் கட்டணத்தை அரசே ஏற்றுக்கொள்ள முன்வர வேண்டும். தற்போது முதல்-அமைச்சர் அறிவித்துள்ள ரூ.500 கோடி நிதியுதவி போதாது. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு எவ்வித நிதியுதவியும் அளிக்கப்படாதது மிகுந்த வேதனையளிக்கிறது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் அனைவரும் பாதிக்கப்படாத வகையில் அவர்களுக்கு மாத சம்பளத்தை வழங்குவதை உறுதி செய்து அமைப்புசாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் ஒரு மாத வாழ்வாதாரத்திற்குத் தேவையான நிதியுதவி, ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வது ஆகியவற்றைத் தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். அதுதான் ‘தனிமைப்படுத்துதல்’ முயற்சிக்கு வலுசேர்க்கும்.

இதை மனதில் வைத்துத்தான் தி.மு.க. சார்பில் எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும் தங்களது ஒரு மாத சம்பளத்தை முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கிட அறிவுறுத்தியிருக்கிறேன். இவையெல்லாம் ஒருபுறமிருக்க, பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பதுபோல் தனிமைப்படுத்துதலை பொதுமக்கள் கவனத்துடனும் அக்கறையுடனும் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தனிமைப்படுத்திக் கொள்வதால் இன்னொருவரைக் காப்பாற்ற முடியும். அதன்மூலம் நம் குடியிருப்பில், ஊரில், நகரில், மாநகரில் உள்ளோரைக் காப்பாற்ற முடியும். ஒட்டுமொத்தமாகத் தமிழ்நாட்டையும், இந்தியாவையும் கொரோனா நோய்ப் பாதிப்பிலிருந்து வெற்றிகரமாக காப்பாற்றி விட முடியும் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து, அதற்கேற்ப செயல்பட்டிட வேண்டும் என்று தமிழக மக்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். சுய ஒழுக்கத்திலும், சுய கட்டுப்பாட்டிலும் இந்தியாவிற்கே வழிகாட்டியாக விளங்கிடும் தமிழக மக்கள் இதில் மிகுந்த எச்சரிக்கையுணர்வுடன் செயல்பட்டு வீட்டை விட்டு வெளியில் செல்வதைத் தவிர்த்து ஆங்காங்கே கூட்டம் கூடுவதை அறவே தவிர்த்திட வேண்டும் என்று ஒவ்வொருவரையும் இருகரம் கூப்பி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.