ஆளுநரின் ஆய்வு குறித்து சட்டமன்றத்தில் பேச அனுமதியளிக்காததால், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கான சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்துவருகிறது. 10 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் சட்டமன்றம் கூடியது. 

சட்டமன்றம் கூடியதும் நேரமில்லா நேரத்தின் போது ஆளுநரின் ஆய்வு குறித்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேச முற்பட்டார். ஆனால் விதி எண் 92(7)ன்படி ஆளுநர் மற்றும் குடியரசு தலைவர் குறித்து பேச அனுமதிக்க முடியாது என சபாநாயகர் தெரிவித்துவிட்டார். 

ஆளுநரின் ஆய்வு குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதால், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், 1995ம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி சட்டமன்றத்தில், அன்றைய ஆளுநராக இருந்த சென்னா ரெட்டிக்கு எதிராக நீண்ட விவாதம் நடைபெற்றது. அப்போது ஜெயலலிதா முதல்வராக இருந்தார். அப்போதைய ஆளுநர் சென்னா ரெட்டிக்கு எதிராக நீண்ட விவாதம் நடந்து, தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அந்த தீர்மானத்தை அப்போதைய நிதியமைச்சராக இருந்த நாவலர் நெடுஞ்செழியன் முன்மொழிந்தார். 

இப்படி, ஆளுநருக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்த வரலாறு உள்ளது. ஆனால் அதெல்லாம் 1995ல் நடந்த கதை எனக்கூறி, இன்று ஆளுநரின் ஆய்வு குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டது. அதனால் வெளிநடப்பு செய்தோம் என ஸ்டாலின் தெரிவித்தார். 

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி மாவட்ட வாரியாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். ஆளுநர் செல்லும் மாவட்டங்களில் எல்லாம் அவருக்கு எதிராக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பை தெரிவிக்கின்றனர். இந்நிலையில், நாமக்கல்லில் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டதால், அதை எதிர்த்து ஸ்டாலின் தலைமையில் ஆளுநர் மாளிகை முற்றுகையிடப்பட்டது. 

ஆளுநருக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து 7 ஆண்டுவரை சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் ஆளுநரின் ஆய்வு தொடரும் எனவும் ஆளுநர் மாளிகை சார்பில் செய்தி குறிப்பு வெளியிடப்பட்டது. 

இந்நிலையில் தான் இன்று சட்டமன்றத்தில் ஆளுநரின் ஆய்வு மற்றும் நடவடிக்கைகள் குறித்து ஸ்டாலின் பேச முற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.