விவசாயிகள் பிரச்சனை பற்றி தீர்க்க முடியாத அளவுக்கு ஏதோ நெருக்கடியில் முதலமைச்சர் ஓபிஎஸ் இருப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார் .

இது குறித்த அவரது அறிக்கை: 

புத்தாண்டு பிறந்தாலும் தமிழக விவசாயிகளுக்கு இன்னும் விடிவுகாலம் ஏற்படவில்லை. கருகிய பயிர்களைக் கண்ட அதிர்ச்சியில் ஏற்பட்ட மரணங்களும், தரிசாகிப் போன நிலங்களைப் பார்த்து நிகழும் தற்கொலைகளும் இன்னும் தொடர்கிறது. 

இதுவரை உயிரிழந்துள்ள விவசாயிகளின் எண்ணிக்கை 100-ஐ தாண்டி விட்டது. வேதனை தீயில் விவசாயிகளை தள்ளி விட்ட சாதனையைத்தான் மாநிலத்தை ஆட்சி செய்து வரும் அதிமுக செய்து காட்டியிருக்கிறது என்று விவசாயப் பெருமக்கள் ரத்தக் கண்ணீர் வடிக்கின்றனர்.

தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை நேற்று நேரில் சந்தித்து விவசாயிகளின் துயர் துடைக்கும் நடவடிக்கைகளை அவசரமாக மேற்கொள்ள வேண்டும் என்றும், அவர்களின் நலன் காக்கும் விவாதங்கள் நடத்தி, "தமிழகத்தை வறட்சி மாநிலமாக" அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்த தீர்மானம் நிறைவேற்ற, தமிழக சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என அவரிடம் வலியுறுத்தினேன். 

அதிகாரத்தை திரைமறைவில் இருந்து வழிநடத்துபவர்களின் அலட்சியத்தால், நாட்டின் அச்சாணியாகத் திகழும் விவசாயிகளின் வாழ்வு பாலைவனமாகி விடக்கூடாது. தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை பெற முடியாததாலும், பருவமழை பொய்த்ததாலும், அரசின் நிவாரண உதவிகள் கிடைக்காததாலும், அனைத்துத் தரப்பு விவசாயிகளும் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 

விவசாயிகள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற, தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் எனத் தி.மு.கழகம் உள்பட எதிர் கட்சிகள் அனைத்தும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் அதிமுக அரசு மீளா தூக்கத்தில் இருக்கிறது

திமுக சார்பில் நான் முதல்வரிடம் விவசாயிகள் பிரச்சனை குறித்து விவாதிக்க நேரம் கேட்டவுடன், அவசர அவசரமாக மாநில அரசின் சார்பில் வறட்சி நிலவரத்தைப் பார்வையிட ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மிகவும் தாமதமான இந்த நடவடிக்கை இன்னும் எத்தனை விவசாயிகள் உயிரை பலி வாங்க போகிறதோ தெரியவில்லை.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வைத்த கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை முதலமைச்சர் உணர்ந்திருந்தாலும், அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத, ஏதோ ஒரு நெருக்கடியில் அவர் இருக்கிறார் என்பதை அந்த சந்திப்பில் என்னால் உணர முடிந்தது.