Asianet News TamilAsianet News Tamil

"தாலிக்கு தங்கம்” திட்டத்தில் கூட ரூ.111 கோடி முறைகேடா..?” - சி.பி.ஐ. விசாரிக்க ஸ்டாலின் கோரிக்கை

stalin pressmeet
Author
First Published Nov 30, 2016, 1:37 PM IST


இது தொடர்பாக திமுக பொருளாளரும், எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

 “தாலிக்கு தங்கம் வாங்கும்” திட்டத்தின் கீழ் 111.43 கோடி ரூபாய் அதிக விலை கொடுத்திருப்பதாக வந்துள்ள செய்தி, அ.தி.மு.க. ஆட்சியில் ஏழை எளியவர்களின் திருமாங்கல்ய திட்டம் கூட முறையாக செயல்படுத்தப்படவில்லை என்பதை எடுத்து காட்டுகிறது என தெரிவித்துள்ளார்.

18.8.2011 அன்று துவங்கி 29.12.2015 வரை சமூக நலத்துறை செய்துள்ள தாலிக்கு தங்கம் கொள்முதலில், ஒவ்வொரு முறையும் சர்வதேச மதிப்பை விட அதிக விலை கொடுத்தே வாங்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

அத்தனை விவரங்களும் “தகவல் உரிமை விவரச் சட்டப்படி” பெறப்பட்டிருக்கிறது என்பது “தாலிக்கு தங்கம்” வாங்குவதில் அரசு பணம் 111 கோடி ரூபாய் எப்படி ஊதாரித்தனமாக செலவிடப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், 2.1.2012 அன்று ஒரு வங்கியிடமிருந்து 30 ஆயிரம் தங்க நாணயங்கள் வாங்கப்பட்டுள்ளன. 4 கிராம் தங்க நாணயம் ரூபாய் 11 ஆயிரத்து 97 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அன்றைய தினம் 4 கிராம் தங்க நாணயத்தின் சர்வதேச விலை வெறும் 8 ஆயிரத்து 624 ரூபாய் தான்.

இப்படி அ.தி.மு.க. அரசு 17.5.2011 அன்று அறிவித்த “தாலிக்கு தங்கம்” வழங்கும் திட்டத்திற்கு, கடந்த ஐந்து வருடங்களில் தங்க நாணயங்கள் கொள்முதலில் அதிக விலை கொடுத்து, அரசு பணத்தை அள்ளிக் கொடுத்துள்ள நிகழ்வு, அ.தி.மு.க. அரசின் மிக மோசமான நிதி நிர்வாக நிலைமையை எடுத்துக் காட்டுகிறது.

ஏழை எளிய பெண்களுக்கு “தங்க நாணயம்” வழங்கும் திட்டத்தில் கூட அ.தி.மு.க. அரசு செய்துள்ள முறைகேடு, “மாங்கல்யம்” வாங்குவதிலும் அ.தி.மு.க. ஆட்சியில் “மார்ஜினா” என்ற சந்தேகத்திற்கு இடம் அளித்திருக்கிறது. அரசு கஜானாவிலிருந்து 111 கோடி ரூபாய்க்கு மேல் மக்கள் பணத்தை இப்படி அலட்சியமாக வாரி இறைத்ததின் பின்னனி என்ன?

தங்க நாணயம் கொள்முதல் செய்ததில் நிகழ்ந்துள்ள விதிமுறை மீறல்கள், சர்வதேச விலையை விட அதிக விலை கொடுத்து அரசுக்கு 111 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்படுத்தியது உள்ளிட்ட அனைத்து முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios