திமுக வெற்றி பெறும் என்பதை உளவுத் துறை மூலம் தெரிந்துகொண்டு, இனி ஆட்சியில் இருக்க முடியாது என்பதை ஆளும்கட்சியினர் அறிந்துகொண்டனர். எனவே மூன்று பேரை தகுதி நீக்கம் செய்தால் திமுகவால் ஆட்சிக்கு வர முடியாது என்பதற்காகத்தான் இப்படியெல்லாம் நடக்கிறதென ஸ்டாலின் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 18 தொகுதிக்கான இடைத் தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், வரும் மே 19ஆம் தேதி சூலூர், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால் அரசியல் கட்சித் தலைவர்கள் மீண்டும் பிரச்சாரக் களத்தில் இறங்கியுள்ளனர்.

ஓட்டப்பிடாரத்தில் நேற்று பகலில் திண்ணை பிரச்சாரம் மேற்கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின், திமுக சார்பில் போட்டியிடும் எம்.சி.சண்முகையாவை ஆதரித்து இரவு திறந்தவெளி வேனில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

வரும் 23ஆம் தேதியுடன் எடப்பாடி ஆட்சியை விரட்டி அடிக்க வேண்டும் என்று தனது உரையைத் தொடங்கிய ஸ்டாலின், “திமுக வெற்றி பெறும் என்பதை உளவுத் துறை மூலம் தெரிந்துகொண்டு, இனி ஆட்சியில் இருக்க முடியாது என்பதை ஆளும்கட்சியினர் அறிந்துகொண்டனர். எனவே மூன்று பேரை தகுதி நீக்கம் செய்தால் அதிக இடத்திலிருந்தாலும் திமுக ஆட்சிக்கு வர முடியாது என்பதற்காகத்தான் மூன்று எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களான அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு ஆகியோருக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியது தொடர்பாகப் பேசினார்.

இது ஜனநாயகப் படுகொலை என்ற அவர், இதைத் தடுக்க வேண்டும் என்பதால்தான், சபாநாயகர் மேல் நம்பிக்கை இல்லை. அவரது பதவியைப் பறிக்க வேண்டும் என நாங்கள் கடிதத்தைக் கொடுத்தோம். கடிதம் கொடுத்ததன் மூலம் உச்ச நீதிமன்ற விதிமுறைப்படி முதலில் சபாநாயகர் மீதான கடிதம் குறித்துதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் பிறகுதான் மூன்று எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். இது தான் முறை என்றார்.