தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் என்று நடிகர் ரஜினியின் மிக நெருக்கமான நண்பரான மோகன் பாபு தெரிவித்துள்ளது தி.மு.க.வினரை உற்சாகம் அடைய வைத்துள்ளது. அரசியலில் காலடி எடுத்து வைக்க உள்ள ரஜினிக்கு தனிப்பட்ட வாழ்வில் நண்பர்கள் மிகவும் குறைவு. பெங்களூர் ராஜ் பகதூர் மற்றும் ஆந்திராவின் மோகன் பாபு ஆகியோர் தான் ரஜினியின் அந்தரங்க நண்பர்கள். இவர்களுடன் தான் ரஜினி அடிக்கடி இமயமலை செல்வது. இவர்களில் ராஜ்பகதூர் ரஜினியின் இளமை கால நண்பர். மோகன் பாபுவோ ரஜினி திரையுலகில் முன்னேறிய காலத்தில் நண்பர் ஆனவர்.

 

நண்பர்களை பற்றி பேச்சு வந்தால் ரஜினி ராஜ் பகதூர் மற்றும் மோகன் பாபு குறித்து பேசாமல் இருக்கமாட்டார். அதிலும் மோகன் பாபு மீது ரஜினிக்கு மிகவும் அதிக அன்பு உண்டு. தன்னுடைய மகள்களில் ஒருவரை மோகன் பாபுவின் மகனுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்பதில் ரஜினி உறுதியாக இருந்தார். ஆனால் ஐஸ்வர்யா தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சவுந்தர்யாவும் அஸ்வினை திருமணம் செய்து கொள்ள வேண்டிய நிலை உருவானது. இந்த சமயத்தில் ரஜினி ஐதராபாத் சென்று தனது நண்பர் மோகன் பாபுவிடம் தனது மகளை உனது மகனுக்கு திருமணம் செய்து கொடுக்க முடியாததற்கு வருத்தம் தெரிவித்ததாகவே கூட தகவல் உண்டு. 

அதற்கு உன்னுடை முடிவு எப்போதும் சரியானதாகவே இருக்கும், என் மகனை உன் மகள் திருமணம் செய்யவில்லை என்றால் என்ன, உன் மகளை திருமணம் செய்பவன் எனக்கு மகன் தான் என்று பேசி ரஜினியை நெகிழச் செய்தவர் மோகன் பாபு. சில மாதங்களுக்கு முன்பு கூட சென்னை வந்த மோகன் பாபு ரஜினியை சந்தித்து பேசினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மோகன் பாபு, ரஜினி துரியோதனனாக இருந்தாலும் நான் அவனுக்கு கர்ணணாக இருப்பேன் என்று தெரிவித்தார். இந்த அளவிற்கு ரஜினி – மோகன் பாபு இடையே நட்பு அவ்வளவு ஆழமானது. தற்போது அரசியலில் ரஜினி இறங்க உள்ள நிலையில் அவர் தான் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ஆனால் ரஜினியின் நெருங்கிய நண்பரான மோகன் பாபுவோ, தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் என்று கூறியுள்ளார். கோவையில் நடைபெற்ற கலைஞர் நினைவேந்தல் கூட்டத்தில் பங்கேற்று பேசிய மோகன் பாபு, கலைஞர் ஆசியுடன் ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார் என்று தெரிவித்துள்ளார். ரஜினியின் மிக நெருக்கமான நண்பரான மோகன் பாபுவே அடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் தான் என்று கூறியுள்ளது தி.மு.கவினை மகிழ்ச்சி அடையவைத்துள்ளது.

இதனிடையே கலைஞர் நினைவேந்தலில் ரஜினியின் நண்பரான மோகன் பாபுவை அழைத்து வந்து பங்கேற்கச் செய்ததில் கூட அரசியல் இருப்பதாக கூறப்படுகிறது. மோகன் பாபு அந்த அளவிற்கு பிரபலமான நடிகர் இல்லை. ஆனால் ரஜினியின் நண்பர் என்பதால் அவரை அழைத்து வந்து ஸ்டாலினை தி.மு.க புகழ வைத்து ரஜினிக்கு நெருக்கடி கொடுத்துள்ளதாக பேசப்படுகிறது.