stalin meets farmers in delhi
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
வறட்சி நிவாரணம், காப்பீட்டுத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஜந்தர் மந்தர் மைதானத்தில் தமிழக விவசாயிகள் கடந்த 19 நாட்ளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தச் சூழில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகளை இன்று நேரில் சந்தித்தார்.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், " விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசும் மாநில அரசும் கண்டுகொள்ளாமல் இருப்பது உள்ளபடியே வேதனையை அளிக்கிறது.
தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லிக்கு நேரில் வந்து தமிழக விவசாயிகளை சந்தித்திருக்க வேண்டும். ஆனால் அவர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலேயே தனது கவனத்தை அவர் செலுத்தி வருகிறார்."
"நிதி அமைச்சர் ஜெயக்குமார் நேற்று இங்கு வந்து ஏதோ ஆதரவு தருவதாக சொல்லி விட்டு திமுக மீது பழிசுமத்தி சென்றிருக்கிறார். ஆனால் அதிமுக ஆட்சியில் தான் தமிழக விவசாயிகள் 250க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு உதவித் தொகை கூட வழங்க முடியாத ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

ஜூன் மாதத்தில் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கடந்த ஆறு வருடங்களாக திறந்துவிடப்படவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் விரைவில் அனைத்துக் கட்சித் கூட்டத்தை கூட்டி விவசாயிகளின் பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்படும்." இவ்வாறு அந்தப் பேட்டியில் ஸ்டாலின் தெரிவித்தார்.
