காவேரி மருத்துவமனைக்கு கலைஞர் உடல் நிலை குறித்து விசாரிக்கச் சென்ற ரஜினியின் வருகையை வைத்து மு.க.அழகிரி ஸ்கோர் செய்து அசத்திவிட்டார்.

   கலைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதலே, ஏராளமான வி.ஐ.பிக்கள் நேரில் சென்று ஸ்டாலினை சந்தித்து பேசி வருகின்றனர். பிரபலங்கள் ஸ்டாலினை சந்தித்துச் சென்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உடனுக்குடன் தி.மு.க ஐ.டி விங்க் மூலம் ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டு வந்தனர். முக்கிய பிரமுகர்கள் மற்றும் குறிப்பிட்ட சிலரின் புகைப்படங்கள் மட்டுமே தி.மு.கவால் வெளியிடப்பட்டன.

   டி.டி.வி தினகரன் ஸ்டாலினை சந்தித்துச் சென்ற புகைப்படம் வெளியிடப்படவில்லை. இதே போல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் ஸ்டாலினை சந்தித்துச் சென்ற புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியடப்பட்டன. ஆனால் அவர்கள் இருவரும் கலைஞரை நேரில் சென்று சந்தித்த புகைப்படங்கள் வெளியாகவில்லை. அதே சமயம் ராகுல் மற்றும் வெங்கய்ய நாயுடு கலைஞரை சந்தித்த புகைப்படங்கள் வெளியாகின.

   இப்படியாக கலைஞர் நலம் விசாரிக்க வருகை தரும் பிரபலங்களின் புகைப்படங்களை வெளியிடுவதில் கூட ஸ்டாலின் தரப்பு பாரபட்சம் காட்டுவதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் தான் ரஜினி காவேரி மருத்துவமனைக்கு சென்று ஸ்டாலின், கனிமொழியை சந்தித்து கலைஞர் உடல் நிலை குறித்து விசாரித்தார். மேலும் அழகிரியையும் தேடிச் சென்று ரஜினி கலைஞர் குறித்து கேட்டறிந்தார்.

   ரஜினி மருத்துவமனையில் இருந்து புறப்பட்டு வெகு நேரம் ஆகியும் உள்ளே எடுக்கப்பட்ட புகைப்படங்களை தி.மு.க  ஐ.டி விங்க் ரிலீஸ் செய்யவில்லை. ஒரு கட்டத்தில் செய்தியாளர்கள் தி.மு.க ஐ.டி. விங்க் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு ரஜினி – ஸ்டாலின் சந்திப்பு புகைப்படங்களை கேட்க ஆரம்பித்தனர். ஆனால் அவர்கள் தரப்பில் இருந்து எந்த ஒரு ரெஸ்பான்சும் இல்லை.

   இந்த நிலையில் திடீரென மு.க.அழகிரியுடன் ரஜினி சந்தித்தது போன்ற புகைப்படம் ட்விட்டரில் வெளியானது. அழகிரியின் மகன் துரை தயாநிதி இந்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படம் உடனடியாக அனைத்து ஊடகங்களிலும் வெளியிடப்பட்டது. ஸ்டாலின் – ரஜினி புகைப்படம் வெளியாகாத நிலையில் அழகிரி – ரஜினி புகைப்படம் வெளியானது குறித்து சிறிய அளவில் விவாதமே அரங்கேறியது.

   பிறகு தான் ஒருவழியாக ஸ்டாலின் – ரஜினி சந்திப்பு புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டது. மேலும் வெளியிடப்பட்ட வீடியோவும் வெறும் 10 நொடிகள் மட்டுமே இருந்தன. புகைப்படத்திலும் ரஜினி ஸ்டாலினுடன் பேசாமல் அருகில் இருந்த வேறு ஒருவருடன் பேசுவது போன்று இருந்தது. அந்த நபர் தெரியாமல் இருக்க போட்டோ எடிட் வேறு செய்ப்பட்டிருந்தது. இப்படியாக ரஜினியின் வருகையை வைத்து ஸ்டாலின் தரப்பு அரசியல் செய்ய, அதனையே அழகிரி தரப்பு தங்களுக்கு சாதகமாக்கி ஸ்கோர் செய்துவிட்டது.