Asianet News TamilAsianet News Tamil

இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்...! அமித்ஷாவிற்கு அவசர கடிதம் எழுதிய ஸ்டாலின்..! என்ன காரணம் தெரியுமா

தமிழ்நாட்டில், ஆவின் பால் கொள்முதலை பாதிக்கும் வகையில் அமுல் நிறுவனம் செயல்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்திட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

Stalin letter to Amit Shah asking him to stop Amul from trying to destroy Aavin
Author
First Published May 25, 2023, 12:04 PM IST

தமிழகத்தில் அமுல் தொழிற்சாலை

அமுல் நிறுவனம் தமிழ்நாட்டின் கிருஷ்னகிரி மாவட்டத்தில் குளிரூட்டும் மையங்கள் மற்றும் பதப்படுத்தும் நிலையத்தை நிறுவி பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பால் கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக ஆவின் பால் பின்னடைவை  சந்திக்கும் என கூறப்பட்டது. இந்தநிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சர் அமித்ஷவாவிற்கு எழுதியுள்ள கடிதத்தில், பிற மாநிலங்களில் திறம்படச் செயல்படும் பால் கூட்டுறவு சங்கங்களைப் போலவே தமிழ்நாட்டிலும் ஊரகப் பகுதிகளிலுள்ள பால் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோரின் நலனுக்காக 1981 ஆம் ஆண்டு முதல், மூன்றடுக்கு பால் கூட்டுறவு அமைப்பு திறம்பட செயல்பட்டு வருவதாகவும், ஆவின் நிறுவனம் தலைமைக் கூட்டுறவு விற்பனை இணையமாக செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Stalin letter to Amit Shah asking him to stop Amul from trying to destroy Aavin

ஆவின் நிர்வாகம் பாதிப்பு

தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் ஆவின் கூட்டுறவு இணையத்தின் கீழ் 9,673 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன என்றும் அச்சங்கங்கள் நாளொன்றுக்கு 35 இலட்சம் லிட்டர் பாலினை 4.5 இலட்சம் உறுப்பினர்களிடமிருந்து கொள்முதல் செய்கின்றன என்றும் குறிப்பிட்டுள்ள  முதலமைச்சர், இதன் வாயிலாக, பால் உற்பத்தியாளர்களுக்கு ஆண்டு முழுவதும் இலாபகரமான மற்றும் சீரான விலை கூட்டுறவு சங்கங்களால் உறுதி செய்யப்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.  இந்தச் சூழ்நிலையில், அமுல் நிறுவனம் தமிழ்நாட்டின் கிருஷ்னகிரி மாவட்டத்தில் குளிரூட்டும் மையங்கள் மற்றும் பதப்படுத்தும் நிலையத்தை நிறுவியுள்ளது குறித்தும். தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி தருமபுரி, வேலூர். இராணிப்பேட்டை திருப்பத்தூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பால் உற்பத்தியாளர்கன் மற்றும் சுய உதவிக் குழுக்கள் மூலம் பால் கொள்முதல் செய்யத் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Stalin letter to Amit Shah asking him to stop Amul from trying to destroy Aavin

வெண்மை புரட்சிக்கு எதிரானது

இந்தியாவில், மாநிலங்களுக்குள் ஒருவருக்கொருவர் பால் உற்பத்திப் பகுதியை மீறாமல் தங்களது கூட்டுறவுச் சங்கங்கள் செழிக்க பால் கொள்முதலை அனுமதிப்பது வழக்கமாக இருந்து வரும் நிலையில், அமுல் நிறுவனம் மேற்கொள்ளும் இத்தகைய எல்லை தாண்டிய கொள்முதல், 'வெண்மை புரட்சி' என்ற கொள்கைக்கு எதிராக அமைவதுடன், நாட்டில் பால் பற்றாக்குறை உள்ள சூழ்நிலையில் நுகர்வோர்களுக்கு மேலும் சிக்கல்களை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.  எனவே அமுல் நிறுவனத்தின் இத்தகைய செயல்பாடு, பல்லாண்டுகளாக கூட்டுறவு மனப்பான்மையுடன் செயல்பட்டுவரும் ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்திப் பகுதியில் பாதிப்பினை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

Stalin letter to Amit Shah asking him to stop Amul from trying to destroy Aavin

உடனடியாக தடுத்து நிறுத்திடுக

அமுல் நிறுவனத்தின் இத்தகைய செயல் பால் மற்றும் பால் பொருட்களைக் கொள்முதல் செய்து விற்பனை செய்யும் கூட்டுறவு சங்கங்களிடையே ஆரோக்கியமற்ற போட்டியை உருவாக்கிவிடும் என்று தெரிவித்துள்ளார்.  எனவே மாநிலங்களில் செயல்படும் கூட்டுறவு அமைப்புகள், பால்வளத் துறையின் வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கி வருவதுடன் பால் உற்பத்தியாளர்களை அத்தொழிலில் ஈடுபடுத்துவதற்கும் ஊக்குவிப்பதற்கும் உதவுவதாகவும் தன்னிச்சையான விலை உயர்விலிருந்து நுகர்வோரைப் பாதுகாப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.எனவே இந்த விவகாரத்தில் மத்திய  உள்துறை அமைச்சர் அவர்கள் உடனடியாகத் தலையிட்டு, தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்திப் பகுதிகளில், அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்வதைத் தடுத்து நிறுத்திட வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். 

இதையும் படியுங்கள்

சிங்கப்பூரில் இருந்து மதுரைக்கு நேரடி விமான சேவை..! சிங்கப்பூர் உள்துறை அமைச்சருக்கு உறுதி அளித்த ஸ்டாலின்

Follow Us:
Download App:
  • android
  • ios